ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் அறிக்கை: தமிழகத்தில் நடக்கவுள்ள, நாட்டின் குடியரசு தின விழா கொண்டாட்டங்களில், நம் மாநிலத்தின் சுதந்திர போராட்ட வீரர்களையும், அவர்களின் தியாகங்களையும் பள்ளி குழந்தைகள் அறியும் வகையில் ஊர்திகள் இடம்பெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன்.
தமிழக அரசுக்கும் தேசிய மற்றும் சுதந்திர உணர்வு வர வேண்டும் என்பதற்காகத் தான், குடியரசு தின டில்லி அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில், நம் ஊர்திக்கு மத்திய அரசு, 'நோ' சொல்லி விட்டதோ?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பது சாலை போக்குவரத்து தான். ஊரடங்கு நாட்களில், பழுதான சாலைகளை புனரமைக்கும் பணியை மேற்கொண்டால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாது; செலவும், நேரமும் மிச்சமாகும்.
நல்ல அறிவுரை தான். பலத்த மழையால், பெரும்பாலான தமிழக சாலைகள் சேதமடைந்துள்ளன. இந்த நேரத்தில் சரி செய்யலாமே!
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: சென்னை, தாம்பரம் மாநகராட்சிகளை பழங்குடியின மக்களுக்கும், 11 மாநகராட்சிகளைப் பெண்களுக்கும் ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக அரசை வரவேற்கிறேன்.
பத்து அறிக்கைகளில் அரசையும், ஆளும் கட்சியையும் கண்டிக்க வேண்டும்; 11வது அறிக்கையில் லேசாக பாராட்ட வேண்டும் என, புதிய வியூகம் வகுத்துள்ளீர்கள் போலிருக்கிறதே!
தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: 'ஒமைக்ரான்' தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. எனினும், 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மட்டும் ஏன் இன்னும் மூடப்படவில்லை?
இதற்கான பதில், தமிழக மக்கள் நன்கு அறிந்தது தான்... நீங்கள் அறியாமல் இருப்பது தான் வினோதம். வருமானத்திற்கு தமிழக அரசு வேறு என்ன செய்யும்... சொல்லுங்கள்!
தமிழக பா.ஜ., பொறுப்பாளர், சி.டி.ரவி அறிக்கை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு வழங்கிய பரிசு தொகுப்பில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. மாநில அரசு வழங்கிய உணவு பொருட்களில் பூச்சிகளும், புழுக்களும் இருந்துள்ளன. தமிழக மக்களின் சாபம், இந்த ஊழல் அரசை வீழ்த்தும்.

மொத்தத்தில், பொங்கல் பரிசு தொகுப்பிற்கான, 1,200 கோடி ரூபாய், 'பொங்கல்' ஆகி விட்டது என்கிறீர்கள்!
மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை: தொழிலாளர்களின் உற்பத்தி அதிகரித்து, வேலைவாய்ப்பு குறைந்துள்ளதன் மூலம், தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது. பிரதமர் மோடியின் கொள்கையால், முதலாளித்துவம் பரவியுள்ளது.
உங்கள் வாழ்நாளில் என்றாவது, மத்தியில் ஆண்ட, ஆளும் அரசுகளை பாராட்டியுள்ளீர்களா... எதிர்மறையாக பேசியே, இத்தனை காலமாக அரசியல் செய்து விட்டீர்கள்... எனினும், நாடு வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE