வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அமர்ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கு, முப்படை வீரர்களின் மரியாதையுடன், டில்லியில் உள்ள தேசிய போர் நினை சின்னத்தில் உள்ள விளக்குடன் இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 1971 ம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக டில்லி இந்தியா கேட் பகுதியில், 1972 ஜன.,26 அன்று அமர்ஜவான் ஜோதி அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது.. இந்த விளக்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு டில்லி இந்தியா கேட் பகுதியில் தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இங்கு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தானுடன் நடந்த போர் முதல் தற்போது வரை நடந்த போர்களில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த சின்னம் அமைக்கப்பட்டதுடன், அவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், அமர்ஜவான் ஜோதியில் உள்ள அணையா விளக்கு, தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படுகிறது. இரண்டு அணையா விளக்குகளும் ஒன்று சேர்க்கப்படுகிறது. தேசிய போர் நினைவு சின்னத்தில் அணையா விளக்கு எரிந்து வரும் நிலையில், இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி விளக்கு தனியாக எரிய தேவையில்லை என்பதால், இரு விளக்குகளும் இன்று மாலை ஒன்றாக இணைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
இணைப்பு
இந்நிலையில், முப்படை வீரர்களின் அணிவகுப்புடன், அமர்ஜவான் ஜோதியில் இருந்து எடுத்து செல்லப்பட்ட அணையா விளக்கு, தேசிய போர் நினைவிடத்தில் உள்ள விளக்குடன் இணைக்கப்பட்டது. வீரர்கள் மரியாதையுடன் இந்த நிகழ்ச்சி நடந்தது. அதில், முப்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராகுல் வருத்தம்
இதற்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போர் வீரர்களுக்காக ஏற்றப்பட்ட அமர்ஜவான் ஜோதியில் ஏற்றப்பட்ட அணையா விளக்கு அணைக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. சிலரால் தேசப்பற்றையும் தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியாது. நமது வீரர்களுக்காக மீண்டும் அமர்ஜவான் ஜோதியை ஏற்றுவோம் என தெரிவித்திருந்தார்.

மத்திய அரசு விளக்கம்
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்த விவகாரத்தில் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அமர்ஜவான் ஜோதியில் உள்ள விளக்கு அணைக்கப்படவில்லை. தேசிய போர் நினைவு சின்னத்தில் உள்ள விளக்குடன் இணைக்கப்படுகிறது. 1971ல் நடந்த போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் மட்டும் தான் அமர்ஜவான் ஜோதியில் உள்ளது. மற்ற போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர் அங்கு இல்லை. சுதந்திரத்திற்கு பிறகு நடந்த போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெயர்கள் தேசிய போர் நினைவு சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கு அஞ்சலி செலுத்துவதே அனைத்து வீரர்களுக்கும் செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகும். கடந்த 7 தசாப்தங்களாக தேசிய போர் நினைவு சின்னம் அமைக்காதவர்கள், வீரமரணம் அடைந்த வீரர்கள் அனைவருக்கும் உண்மையாக அஞ்சலி செலுத்தப்படுவதை கண்டு கண்ணீர் வடிக்கின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE