கிருஷ்ணகிரி: ''தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சிக்க, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமிக்கு தகுதி இல்லை,'' என, தி.மு.க., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் அன்பழகன் எம்.எல்.ஏ., வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியது, எல்லா ஆட்சி காலகட்டங்களிலும் நடக்கும் துறை சார்ந்த பணி மட்டுமே. கடந்த, 10 ஆண்டுகால, அ.தி.மு.க., ஆட்சியின் தோல்வியால் தான் தற்போது, தி.மு.க., ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சியின் தோல்வி என, முனுசாமி பேசிவருவது வேடிக்கை. கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்டவர்களின் வீடுகளில் ரெய்டு நடந்தது. அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறி நடந்ததா. எனவே, இதுபோன்ற செயல்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். பொங்கல் தொகுப்பில் ஊழல் நடந்திருந்தால் வழக்கு போடுங்கள். தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சிக்க முனுசாமிக்கு தகுதி இல்லை. தேர்தலுக்கு முன் பெரியஏரி, கரடிஹள்ளி, எண்ணேகொள் பகுதிகளில் பூஜை போட்டு விட்டு தண்ணீர் வரும் எனக்கூறி நாமம் போட்டவர் தான் முனுசாமி. கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட அஞ்செட்டி, போச்சம்பள்ளி ஒன்றியங்களை செயல்படுத்தி ஆணை பிறப்பித்தார்களா. இப்படி, எந்த எந்த காரியத்தையும் செயல்படுத்தாமல், தி.மு.க.,வை குறை கூற அவர்களுக்கு தகுதி இல்லை. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE