நாமக்கல்: நாமக்கல், அரசு தலைமை மருத்துவமனையில் குடிபோதை தலைக்கேறி, டாக்டர் ஒருவர் மயங்கினார்.
நாமக்கல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள், பணியாளர்கள் என, 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். காலையில் இருந்து இரவு வரை, நாமக்கல் மட்டுமின்றி கரூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து தினமும், 1,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரேத பரிசோதனை கூடத்தில் டாக்டராக பணியாற்றும் சிவானந்தம், நேற்று மதியம் அளவுக்கதிகமாக மது குடித்துவிட்டு போதை தலைக்கேறி மயங்கினார். அவரை ஊழியர்கள் சிலர் தூக்கி வந்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள, மக்கள் சேவை மையம் அறையில் படுக்க வைத்து சென்றனர். நீண்டநேரம் போதையில் இருந்த அவர், மாலையில் எழுந்து சென்றதாக கூறப்படுகிறது. அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் குடிபோதையில் மயங்கி கிடந்தது, மற்ற டாக்டர்களையும், ஊழியர்களையும் முகம் சுளிக்க வைத்தது. இது குறித்து, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தா அருள் மொழி கூறியதாவது: அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் சிவானந்தம் என்ற டாக்டர், பணி நேரத்தில் குடிபோதையில் இருந்தது குறித்து, மருத்துவத்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் விரைவில் நடவடிக்கை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.