இந்திய கம்யூ., மாநில தலைவர் இரா.முத்தரசன் பேட்டி: கடந்த ஓராண்டாகவே, தேசிய அளவில், பா.ஜ., படுதோல்வியை சந்தித்து வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவின் சொந்த மாவட்டத்தில் நடந்த இடைத் தேர்தலிலேயே, அக்கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள் உண்மையை உணர துவங்கி இருப்பதே இதற்கு காரணம்.கடந்த ஓராண்டாக உண்மையை உணரத் துவங்கி விட்ட மக்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிவினைவாதம் பேசி வரும் உங்களை கண்டுகொள்ளவில்லை போலிருக்கிறதே!
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்த மத்திய அரசை கண்டித்து, வரும் 26, குடியரசு நாளில் வீடு தோறும் கண்டன குரல் எழுப்புவோம்.நாட்டின் குடியரசு தினத்திற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உங்களின் விருப்பம், ஊதி பெரியதாக ஆக்கிய, 'ஊர்தி' விவகாரத்தில் நிறைவேறியுள்ளது போலிருக்கிறதே!
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி: எம்.ஜி.ஆரை மட்டுமல்ல, அவரது சிலையை கூட பார்க்காதவர்கள், தாங்கள் தான், எம்.ஜி.ஆர்., சிலையை வைத்ததாக கூறிக் கொள்கின்றனர். கருணாநிதி ஆட்சியில் தான், எம்.ஜி.ஆர்., சிலை நிறுவப்பட்டது.சிலை வைத்ததால், எம்.ஜி.ஆர்., மீது கருணாநிதிக்கு அதிக பாசம், நல்லெண்ணம் என்று கூற முடியுமா... ஒரு சில நிர்பந்தங்களால் வைத்திருக்கலாமே!
ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி: நாட்டின் சுதந்திர போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர், ஈ.வெ.ரா., மேலும், ஆகஸ்டு 15 சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு நாளை, துக்க நாட்கள் என்று கூறியவர். இவருக்கும், சுதந்திரப் போராட்டத்திற்கும் என்ன தொடர்பு? நல்ல கேள்வி தான்... இதை திராவிட கட்சிகள் நன்கு தெரிந்தும், இன்னமும் அவரை பிடித்து தொங்கிக் கொண்டுள்ளது தான் வினோதமாக இருக்கிறது!
அ.தி.மு.க., முன்னாள் செய்தித்துறை அமைச்சர் ராஜு பேச்சு: தமிழக மக்களின் ஆதரவு எங்களுக்கு தான் என மார்தட்டும், தி.மு.க., வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வை எதிர்த்து, தனித்து நிற்க தயாரா?அப்போ, தி.மு.க.,வை எதிர்த்து, அ.தி.மு.க.,வும் தனித்து போட்டியிடுமா... பா.ஜ.,வை கழற்றி விடப் போகுதா என்ற கேள்வி எழுகிறதே!
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: சென்னை தாம்பரம் அருகே, கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த இருவர் பலியாகியுள்ளனர். இனிமேலும் இத்தகைய இழிநிலை தொடர்வதை தடுக்க, அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.இழப்பீடு வழங்கினால் மட்டும் போதாது; நிரந்தர தீர்வுக்கு வழி காண வேண்டும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE