அமிர்தசரஸ்:அபு தாபி குண்டு வெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் இருவரின் உடல்கள் பஞ்சாபிற்கு எடுத்து வரப்பட்டன.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபு தாபியில் உள்ள 'அட்னாக்' நிறுவனத்தின் மூன்று எண்ணெய் 'டேங்கர்'கள், விமான நிலையம் ஆகியவற்றின் மீது, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதல்
ஆளில்லா விமானத்தின் வாயிலாக குண்டு வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், பஞ்சாபைச் சேர்ந்த ஹர்தேவ் சிங், ஹர்தீப் சிங் ஆகியோரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர். ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் அபு தாபியில் இறந்த ஹர்தேவ் சிங், ஹர்தீப் சிங் ஆகியோரின் உடல்கள் பஞ்சாபிற்கு விமானத்தில் எடுத்து வரப்பட்டன. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து ஹர்தேவ் சிங் உடல், அவரது சொந்த கிராமமான பகா புராணாவுக்கு எடுத்துச் செல்லப் பட்டது.
திருமணம்
மஹிசம்புர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட ஹர்தீப் சிங் உடலை, அவரது மனைவி கனுப்ரியா கவுர் பெற்றுக் கொண்டார். இவர்களுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன் தான் திருமணம் ஆனது. கணவர் உடலை பெற்றுக் கொள்ள அவர் கனடாவில் இருந்து பஞ்சாப் வந்துள்ளார். ஹர்தீப் சிங், ஜன., 19ல் பஞ்சாப் வந்து, கனடா செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்குள் விதி விளையாடி அவர் உயிரை பறித்து விட்டது. ஹர்தேவ் சிங், ஹர்தீப் சிங் ஆகியோர் அட்னாக் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE