சென்னை : பொங்கல் பரிசு தொகுப்பில், தரமற்ற பொருட்கள் இருந்ததாகவும், பொருட்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளதால், இதில் முறைகேடு செய்தோர் மீது, முதல்வர் ஸ்டாலின் கடும் கோபம் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து, 'தவறு செய்தோர் மீது கடும் நடவடிக்கை பாயும்' என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழக அரசு சார்பில், 2.15 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 1,29௭ கோடி ரூபாய் செலவில் அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், முழு கரும்பு உட்பட, 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பல இடங்களில், பொங்கல் பரிசு தொகுப்பில் இடம் பெற்றிருந்த பொருட்கள், தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
சில இடங்களில், பொருட்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும் புகார் கூறப்பட்டது; பைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொருட்கள் கொள்முதலில், பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலில் ௫௦௦ கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதை, துறை அமைச்சர் சக்கரபாணி மறுத்துள்ளார்.
வெள்ளை அறிக்கை
ஆனாலும், அமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், 'பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக, அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்று நேற்று வலியுறுத்தியுள்ளார். இது போன்ற விவகாரங்களால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடர்பான ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, நிதித் துறை, கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதல் மற்றும் வினியோகத்தின் போது, துறையால் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை, அலுவலர்கள் விளக்கினர். தரக் கட்டுப்பாடு குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.விரிவான ஆய்வுக்கு பின், அதிகாரிகளுக்கு முதல்வர் பிறப்பித்த உத்தரவு:பொங்கல் பரிசுப் பொருட்கள் வினியோகத்தில், புகார்கள் எழக் காரணமான அலுவலர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்ப்பது உட்பட, தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
நற்பெயருக்கு களங்கம்
பொது மக்களுக்கு அனைத்து வகையிலும், தரமான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை, எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது.ரேஷன் கடைகளில், பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள், எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் வினியோகம் செய்யப்பட வேண்டும். அதை, அந்தந்த பகுதியில் உள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும். தவறு செய்வோர் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE