புதுடில்லி :முக்கியமான மற்றும் ரகசிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தும் கூட்டங்களின்போது, அலைபேசி,, ஸ்மார்ட் வாட்ச்' போன்ற சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி மத்திய அரசு உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் பரிமாற்றம்
மத்திய அரசின் உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய தகவல் பரிமாற்றம் பாதுகாப்பு தொடர்பாக சில புதிய வழிமுறைகளை, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் உள்துறை அமைச்சகங்கள் இணைந்து வெளியிட்டுள்ளன. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: அரசு துறைகளின் 'சைபர்' பாதுகாப்பை கவனிக்கும் அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, நம் உயரதிகாரிகளின் தகவல்களை திருடுவதற்காக, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் புதிய முறைகளை பயன்படுத்துகின்றன.
இந்த நாடுகளில் இருந்து வெளியிடப்படும் அலைபேசி, செயலிகள் வாயிலாக தகவல்கள் திருடப்படுகின்றன.அதனால் அரசு உயரதிகாரிகள், 'வாட்ஸ் ஆப், டெலகிராம்' உள்ளிட்ட தனியார் செயலிகள் வாயிலாக முக்கியமான மற்றும் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
'ஹேக்கர்'
பல அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை 'ஸ்கேன்' செய்து, தங்கள் மொபைல் போனில் வைத்திருந்து பகிர்ந்து கொள்கின்றனர். 'ஹேக்கர்' எனப்படும் இணையத் திருடர்கள் இந்தத் தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது.அதனால் அரசு அளித்துள்ள தகவல் பரிமாற்ற வழிமுறைகளை மட்டுமே பயன்படுத்தி தகவல்களை பகிர வேண்டும். தனிப்பட்ட செயலிகள், இணையதளங்கள் வாயிலாக தகவல்களை பகிரக் கூடாது.முக்கிய விஷயங்கள் குறித்து நடத்தப்படும் ஆய்வு கூட்டங்களின்போது மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்துவதை தவிர்க்கவும். கூட்ட அறைக்கு வெளியிலேயே அவற்றை வைக்க வேண்டும்.
அலுவலகத்தில் பணியாற்றினாலும், வீட்டில் இருந்து பணியாற்றினாலும், 'அமேசான் எக்கோ, ஆப்பிள் ஹோம்பேட், கூகுள் ஹோம்' போன்ற உதவி வழங்கும் சாதனங்களை தவிர்க்கவும். அதுபோல, 'சிரி, அலெக்சா' போன்ற 'டிஜிட்டல்' உதவி அளிக்கும் தளங்களை பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE