கோவை: ''வயதானவர்கள், இருதய நோய் மற்றும் கிட்னி பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளவர்கள், பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்வது அவசியம்,'' என்கிறார் கோவை இ.எஸ். ஐ., மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார்.
கொரோனா தொற்று மூன்றாம் அலையின் தீவிரம் குறித்து, டாக்டர் ரவிக்குமாரிடம் பேசிய போது, தற்போதைய நிலவரம் குறித்து அவர் விளக்கினார்.
பலர் தடுப்பூசி போட்டும், மூன்றாம் அலை வர என்ன காரணம்?
கொரோனா மூன்றாவது அலையை பொறுத்தவரை, மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்தால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். முதல் அலையின் போது எல்லோரிடமும் உயிர் பயம் அதிகம் இருந்தது.
அதனால் வெளியில் செல்லாமல், மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருந்தனர். இரண்டாவது அலையில் தடுப்பூசி வந்ததால் பயம் போய் விட்டது. மூன்றாம் அலை வர இதுதான் காரணம்.
தற்போதைய அலையில் வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்தால் போதுமா?
கடந்த இரண்டு அலையை விட, மூன்றாவது அலையின் பாதிப்பு, 10 மடங்கு அதிகமாகி இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளிலும், வீட்டிலும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புகள் பெரிய அளவில் இல்லை என்பது ஆறுதலான விஷயம்.
இந்த முறை, அரசு சில வழிகாட்டும் நெறிமுறைகளை மருத்துவமனைகளுக்கு வழங்கி உள்ளது. அதை பின்பற்றுவதால் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடுபவர்களை, சிகிச்சை அளித்து காப்பாற்ற முடிகிறது. முதல் இரண்டு அலையின் போது, பாசிடிவ் ஆனவர்கள் அனைவரும் மருத்துவமனையில் வந்து அட்மிட் ஆகினர். இப்போது அப்படி இல்லை. லேசான தொற்று உள்ளவர்கள் வீட்டில் தனிமை படுத்துகின்றனர்.
யாரெல்லாம் மருத்துவமனைக்கு போகத் தேவையில்லை?
தடுப்பூசி போட்டவர்களுக்கு பாசிடிவ் இருந்தால், அவர் மருத்துவமனைக்கு போக தேவையில்லை. கடுமையான பாதிப்பு உள்ளவர்களை மட்டும், மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். முன்பு மாதிரி பாதிப்பு உள்ள எல்லோரும், மருத்துவமனைக்கு வந்து படுத்துக்கொள்ள முடியாது.
ஆக்சிஜன் படுக்கை தேவைப்படுகிறதா?
இப்போது, 100 பேரில் ஒருவர் அல்லது இருவருக்குதான், ஆக்சிஜன் படுக்கை தேவைப்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுவதுதான் அரசின் நோக்கம். அதனால் தான் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் அதிக எண்ணிக்கையில் தயாராக உள்ளன.
பூஸ்டர் தடுப்பூசி யார் போட்டுக் கொள்ள வேண்டும்?
இன்றைக்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம், பிற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று வராமல் பார்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து, உயிரை காப்பாற்ற வேண்டும்.
அதற்கான வசதி இப்போது அரசு மருத்துவமனைகளில் இருக்கிறது. வயதானவர்கள், இருதய நோய் மற்றும் கிட்னி பிரச்னை உள்ளவர்கள், ரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளவர்கள், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம்.குழந்தைகளை பொறுத்தவரை, 15 முதல், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போடலாம் என, அரசு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில், 90 சதவீதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாஸ்க் அணிவது மட்டுமே முழு பாதுகாப்பு அளிக்குமா?
ஒமைக்ரான் வைரஸ் தொற்று இருப்பவர், 10 பேர் இருக்கும் அறையில் தும்மினால், எட்டு பேருக்கு தொற்று வந்து விடும். அப்போது, 10 பேரும் மாஸ்க் போட்டு இருந்தால் பிரச்னை வராது. தொற்று வருவதும் வராததும், நாம் பாதுகாப்பாக நடந்து கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது.
பக்கத்து மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகளுக்கு, கோவை மருத்துவமனைகளில் அனுமதி இல்லை. எல்லா இடங்களிலும் சிகிச்சை மையங்கள் உள்ளன. தேவையான மருந்துகளும் உள்ளன. கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு, மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE