மதுரை: மதுரையில் கடையை காலி செய்யுமாறு இறந்தவர் பெயரில் நோட்டீஸ் அனுப்பியதை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, 'கடை நடத்த உரிமம் அளிக்கப்பட்ட நபர் உயிருடன் உள்ளாரா, இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது மாநகராட்சி அதிகாரிகளின் கடமை. இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கக்கூடாது,' என அறிவுறுத்தியது.
மதுரை சாத்தமங்கலம் நாட்ராயன் தாக்கல் செய்த மனு:
குருவிக்காரன் சாலையில் ஆவின் பூங்கா எதிரே சாலையோரத்தில் கடை நடத்த என் தந்தை பெயரில் 1990 ல் மாநகராட்சி உரிமம் வழங்கியது. அவர் இறந்த பின் டூவீலர் வல்கனைசிங் கடை நடத்துகிறேன். நிலுவையின்றி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வருகிறேன். தந்தை பெயரில் உள்ள உரிம ஆவணங்களை ரத்து செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி கடையை காலி செய்ய மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இது சட்டவிரோதம். என்னிடம் விளக்கம் கோரவில்லை.
கடையால் யாருக்கும் இடையூறு இல்லை. நோட்டீசுக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு நாட்ராயன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு: மனுதாரரின் தந்தை இறந்து விட்டார். இதற்கு 1998 ல் மாநகராட்சி இறப்புச் சான்று வழங்கியுள்ளது. அவரது பெயரில் உரிமத்தை ரத்து செய்துவிட்டதாக மாநகராட்சித் தரப்பு கூறுகிறது.
ஆனால் இறந்தவர் பெயரில் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கடை நடத்த உரிமம் அளிக்கப்பட்ட நபர் உயிருடன் உள்ளாரா, இல்லையா என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்ய வேண்டியது மாநகராட்சி அதிகாரிகளின் கடமை.
இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கக்கூடாது. உரிமம் பெற்ற நபர் இறந்துவிட்டால் கடையை சட்டப்படி மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியிருக்க வேண்டும். தகுதியானவருக்கு ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். உண்மையான சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டும். மனுதாரரின் தந்தை பெயரில் அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் பெயரில் புதிதாக நோட்டீஸ் அளித்து சட்டத்திற்குட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE