மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022 - 23ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டை பிப்., 1ல் பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்; இது, அவர் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட். ஸ்திரமற்ற சர்வதேச பொருளாதாரச் சூழல், வேகமாக பரவி வரும் கொரோனா மூன்றாவது அலை, ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் ஆகியவற்றுக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, இது பா.ஜ.,விற்கும் மிக முக்கியமானது என்பதால், மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலைக்கு பின் நாட்டின் பொருளாதாரம் மீட்சி அடைந்துஉள்ளது. அத்துடன், அரசின் நிதியாதாரமும் நன்கு உள்ளது. வரி வருவாய் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் நிதி நிலவரம், கொரோனா காலத்திற்கு முன் இருந்த நிலைமைக்கு திரும்பியுள்ளது.
வேலை வாய்ப்பு
இத்தகைய சூழலில் தேவையை அதிகரிப்பது, வேலைவாய்ப்பை உருவாக்குவது, பொது சுகாதார பராமரிப்பு ஆகியவற்றை குறி வைத்து மீண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவதற்கான பட்ஜெட்டாக இது இருக்கும் எனலாம்.தேவையை அதிகரிப்பதுடன், உற்பத்தி திறனை உயர்த்துவதும் பொருளாதார மீட்சி நடவடிக்கைக்கு உதவும்.இதற்கு வீட்டு வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு, எரிசக்தி, வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல், மருந்து, கல்வி மற்றும் திறன் மேம்பாடு, ஆரோக்கிய பராமரிப்பு ஆகிய முக்கிய துறைகளுக்கு ஊக்கச் சலுகைகளை வழங்கி முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
மேலும் வாகனம், சுற்றுலா, விமானம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், வங்கி, நிதிச் சேவை மற்றும் காப்பீடு ஆகிய துறைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை வலிமையாக்கி, தயாரிப்பு துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்தி, ஏற்றுமதி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளின் சிறப்பான செயல்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகளுக்கு ஆதரவானது என்பதை, பட்ஜெட்டில் காட்ட வேண்டிய பணி நிர்மலா சீதாராமனுக்கு உள்ளது. ஒருபுறம் வருவாயை பெருக்க வேண்டும். மறுபுறம் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, கயிற்றில் நடப்பது போன்ற நிலையில் அவர் உள்ளார்.
ஊக்கச் சலுகை
கொரோனா தாக்கத்திற்குப் பின் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அனைத்து துறைகளுக்கும் ஏராளமான ஊக்கச் சலுகைகளை வழங்கியது. இதன் விளைவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்டதை விட இரு மடங்கு உயர்ந்து, 7.5 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2003ல் அமலான நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தின் கீழ் 2021 மார்ச் 31க்குள் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதமாக குறைக்க வேண்டும்.
அதுபோல 2024 - 25ம் நிதியாண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசின் கடனை 40
சதவீதத்திற்கு குறைக்க வேண்டும்.எனினும் இயற்கை பேரிடர், தேசிய பாதுகாப்பு தொடர்பான சூழலில், இந்த இலக்கில் விலக்கு அளிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை முழுமையாக செலவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து அமைச்சகங்களுக்கும் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார்.
உதாரணமாக ரயில்வேக்கு ஒதுக்கிய நிதியில் 61 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டு உள்ளது.
அதுபோல மின்சாரம், அணுசக்தி, விண்வெளி, தொலைதொடர்பு, வீட்டு வசதி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகங்களும் செலவினங்களில் பின்தங்கியுள்ளன. அதனால் அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் செலவு செய்யப்படாத தொகையை, காலாண்டுக்கு ஒரு முறை தன்னிச்சையாக மத்திய கருவூலத்தில் சேர்க்கும் செயல்திட்டத்தை பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தலாம். இதனால் செலவினங்களை ஆய்வு செய்து தேவையான திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கலாம்.
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் ஆவணங்கள் அச்சடிப்பு பணி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அல்வா தயாரிப்பதுடன் துவங்குகிறது. வரும் நிதியாண்டு பட்ஜெட், அல்வா போல அனைவருக்கும் இனிக்கும் வகையில் இருக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
அன்னிய முதலீடு
நாடு சுதந்திரம் அடைந்தது முதல், ரொக்க அடிப்படையிலான கணக்கு நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது. இதை தவிர்த்து வருவாய் அடிப்படையிலான கணக்கு நடைமுறையை பின்பற்றினால் செலவினங்களை நிதியமைச்சகத்தால் மேலும் கூர்ந்து கண்காணித்து தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
நீண்ட காலம் மற்றும் குறுகிய கால மூலதன ஆதாய வரியை எளிமைப்படுத்த வேண்டும் என பல காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதை செயல்படுத்தினால் அன்னிய முதலீடுகள் மேலும் அதிகரிக்கும். தற்போது அன்னிய முதலீடுகள் மீது நீண்ட கால மூலதன ஆதாய வரிக்கான கால வரம்பு 24 மாதங்களாக உள்ளது. இந்த வருவாய்க்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. அதே சமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டிற்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 10 சதவீதம் செலுத்துகின்றனர்; இந்த வேறுபாட்டை நீக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜி.எஸ்.டி.,யில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. கடந்த 2021ல் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு வாயிலாக மாநில அரசுகள், 2 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளன. இது போல இரு மடங்கு தொகை மத்திய அரசுக்கு கிடைத்து உள்ளது.
இந்த வருவாயை ஜி.எஸ்.டி.,யால் இழக்க மத்திய - மாநில அரசுகள் விரும்பாது. எனவே
பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி.,யில் அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதித்து, அரசியல் சாசன சட்ட திருத்தத்தின் வாயிலாக கரியமில வாயு வரியை அமல்படுத்தலாம்; இது, ஜி.எஸ்.டி.,யுடன்
கூடுதல் வருவாயை அளிக்கும்.வருமான வரிக்கு கூடுதல் வரி, தீர்வை
ஆகியவற்றை நீக்க வேண்டும். போர், கொரோனா போன்ற நோய்த் தொற்று காலங்களில் தான் இத்தகைய வரிகள் வசூலிக்கப்பட வேண்டும்.
வழக்கமாக மத்திய பட்ஜெட் உரை மிகநீளமாக அதிக நேரம் நீடிக்கிறது. அதனால் மிகமுக்கியமான அம்சங்களை மட்டும் கூறி,அமைச்சகங்கள் குறித்த விபரங்களை இணைப்பு அறிக்கையில் வழங்கலாம் என, அரசு யோசனை தெரிவித்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE