வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: அரசியல் கட்சிகளிடமிருந்து பஞ்சாப்பை காக்க தேர்தலில் களமிறங்குகிறோமென விவசாய சங்கம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து ஆம் ஆத்மி, பாஜ., காங்கிரஸ் கட்சிகளின் மும்முனைப் போட்டி பஞ்சாப் மாநில தேர்தலில் களைகட்டவுள்ளது. இவர்களுக்கு போட்டியாக விவசாயிகள் சங்கமான சம்யுக்த சமாஜ் மோர்ச்சா தேர்தலில் களம் காண உள்ளது.
விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான இந்த குழு தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து முன்னதாக அதன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால்(80) கருத்து தெரிவித்தார். இதுகுறித்து கூறிய அவர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்திய களங்கத்தை துடைக்கவே மக்கள் விரும்புவதாகவும் இதனால் தங்களது அமைப்பு தேர்தலில் களம் காண உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியுடன் இந்த விவசாய அமைப்பு கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு இந்த அமைப்பு தலைமை மறுப்பு தெரிவித்தது. மேலும் ஆம் ஆத்மி பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான்மீது விமர்சனத்தையும் முன்வைத்தது.
பஞ்சாப் மாநிலத்தில் அடிமட்டத் தொழிலாளர்கள் பலர் வேலை மற்றும் வாழ்வாதாரம் தேடி பிற மாநிலங்களுக்குச் செல்வதாகவும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டிய பல்பீர் சிங், பஞ்சாப் மாநிலத்தில் தங்கள் சங்கம் ஆட்சி அமைத்து மக்களின் பிரதிநிதியாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டில்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த விவசாயிகள் போராட்டத்துக்கு இந்த அமைப்பை சேர்ந்த விவசாயிகள் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE