வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டில்லி: ஒமைக்ரான் தாக்கத்தால் டில்லியில் பாதிப்பு மிகக் குறைவு என மருத்துவ ஆய்வு ஒன்று தகவல் அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மாநில அரசுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த கொரோனா தாக்கத்தை காட்டிலும் தற்போது ஒமைக்ரான் தாக்கம் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பவோர் மற்றும் மருத்துவமனை சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை முந்தைய தாக்கத்தை ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது தெரியவந்துள்ளது. இச்செய்தி டில்லி மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் படுக்கை வசதிகள் இம்முறை அதிகம் தேவைப்படவில்லை என சுகாதாரத் துறை பணியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். இதுதொடர்பாக மேக்ஸ் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் வைரஸின் முதல் இரண்டு அலைகளின்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவியை பயன்படுத்திய நோயாளிகளை ஒப்பிடுகையில் தற்போது மிகமிகக் குறைவான நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஒரே நாளில் 25 ஆயிரம் நோயாளிகள் தலைநகர் டில்லியில் பாதிக்கப்பட்டனர். அப்போது ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை 74 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 23.4 சதவீதம் மட்டுமே தேவைப்படுகிறது.
இதுகுறித்து மேலும் தெரிவித்த ஆய்வின் தலைவர் சந்தீப் புத்திராஜா, முதல் அலையின்போது டில்லியில் மரணம் அடைபவர்களின் சதவீதம் 7.2 ஆக இருந்தது என்றும் இரண்டாம் அலையின்போது 10.5 சதவீதமாக இருந்ததாகவும் கூறினார்.
ஆனால் தற்போது ஒமைக்ரான் தாக்கத்தின்போது மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 6% ஆகவே உள்ளதாகத் தெரிவித்தார். இவர்களில் பெரும்பாலானோர் நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் வயோதிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை டில்லியில் ஒமைக்ரான் தாக்கத்திற்கு 82 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்படாதவர்கள் 70 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக, இருதய பாதிப்பு கொண்டோர், புற்றுநோய் சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டோரே ஒமைக்ரான் தாக்கத்தால் பலியாகிறார்கள் என்றும் 2 டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 50 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான நபர்கள் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஒமைக்ரான் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE