சென்னை:பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், ரேஷன் பொருட்கள் வாங்க, இனி கைரேகை பதிவு கட்டாயம். 'கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்த பின்னரே, உணவு பொருட்கள் வழங்கப்படும்' என்ற அரசின் பழைய உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் 2020 அக்டோபரில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமலுக்கு வந்தது.அதிலிருந்து, ரேஷன் கார்டில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து, உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.இதற்காக, அனைத்து கடைகளுக்கும் கைரேகை பதிவுடன் கூடிய விற்பனை முனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், கார்டுக்கு உரியவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.
தற்காலிக நிறுத்தம்
மேலும், தமிழகத்தில் வசிக்கும் பிற மாநில கார்டுதாரர்களும் கைரேகையை பதிவு செய்து அரிசி, கோதுமை வாங்கலாம். இதேபோல, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழக கார்டு தாரர்களும், அம்மாநிலங்களில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கலாம்.
இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு மளிகை உட்பட 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு, 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.அவற்றை கார்டுதாரர்களுக்கு விரைந்து வழங்க, கைரேகை பதிவு முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பழைய முறையான ரேஷன் கார்டை, 'ஸ்கேன்' செய்து, பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டன.
கைரேகை பதிவு நிறுத்தப்பட்டதால், பிற மாநில கார்டுதாரர்கள், ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இறுதி கட்டத்தை எட்டிஉள்ளது.இதையடுத்து, நேற்று முன்தினம் முதல் மீண்டும், 'ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களின் கைரேகையை பதிவு செய்து, பொருட்கள் வழங்க வேண்டும்' என்ற அரசின் பழைய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இனி பொங்கல் பரிசு வாங்காதவர்களுக்கும், கைரேகை பதிவு செய்து தான் வழங்கப்பட உள்ளது. கைரேகை பதிவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளதால், பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் இனி வழக்கம் போல, ரேஷன் பொருட்களை வாங்கலாம்
புதிய கார்டுகள் எப்போது?
புதிய ரேஷன் கார்டு கேட்டு, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணைய தளத்தில், பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அதில் தகுதியான நபர்களுக்கு 2021 நவம்பர், டிசம்பரில் புதிய கார்டு வழங்க, அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அந்த விபரம், விண்ணப்பதாரர்களின் மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட்டு உள்ளது.
ஆனாலும், இதுவரை அச்சிடப்பட்ட ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை.இதனால், பல நாட்களுக்கு முன் எஸ்.எம்.எஸ்., வந்த நிலையிலும், கார்டு இல்லாததால் பொங்கல் பரிசு வாங்க முடியவில்லை.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே, நடத்தை விதிகள் அமலுக்கு வரும் என்பதால், புதிய ரேஷன் கார்டு வழங்கக்கூடாது.எனவே, கார்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, எஸ்.எம்.எஸ்., அனுப்பிய பயனாளிகள், அடுத்த மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, அச்சிடப்பட்ட ரேஷன் கார்டை விரைந்து வழங்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், புதிய விண்ணப்பங்களையும் விரைந்து பரிசீலித்து, புதிய ரேஷன் கார்டை துரிதகதியில் வழங்குமாறு கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
5 லட்சம் பேர் வாங்கவில்லை!
தமிழக அரசு 2.15 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தர விட்டது.அதில் நேற்று மாலை வரை, 2.10 கோடி கார்டுதாரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது.இது, மொத்த கார்டு தாரர்களில் 97.44 சதவீதம்.இன்னும் ஐந்து லட்சம் பேர் வாங்காமல் உள்ளனர். இம்மாதம் 31ம் தேதி வரை பொங்கல் பரிசு வாங்க அரசு அவகாசம் அளித்து உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE