கோவில் வழிபாட்டு நம்பிக்கை, எப்படி நம்மை நல்வழிப்படுத்துகிறதோ, அதுபோல் கல்விச்சாலையும் அறிவுக்கண்ணை திறக்கும் ஒரு கோவில்' என மிகுந்த நம்பிக்கையுடன் பேசும் தாயம்மாள்தான் இன்று டிரெண்டிங்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், சின்னவீரன்பட்டி கிராமத்தில், வசித்து வருபவர் ஆறுமுகம் (எ) அய்யாவு. இவரது மனைவி தாயம்மாள். 45. கணவன், மனைவி இருவரும் தினசரி இளநீர் வியாபாரம் செய்து வருகின்றனர். மகன் (21) கல்லுாரி படிப்பை கொரோனா பரவல் காரணமாக தொடரவில்லை. பெற்றோருக்கு உதவியாக இவரும் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.
மகள் பிளஸ் 2 முடித்து, சின்னவீரன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணாக்கர்களுக்கு, இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் பயிற்றுனராக ஏழை மற்றும் கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார். கணவர், மகன், மகள் மூவரும் இப்பள்ளி முன்னாள் மாணவர்கள் என்பதால், தாயம்மாள் அதே பள்ளியில் முன்னாள் பள்ளி மேலாண்மை மற்றும் நிர்வாகக்குழு தலைவராக, ஐந்து ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பள்ளி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்று வரும் இவர், சமீபத்தில் தலைமையாசிரியர் பெற்றோர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பேசியதன் பேரில், இப்பள்ளிக்கு ஏதாவது ஒருவகையில் உதவி செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில், ஆதரவற்றோர் இல்லங்கள், கோவில் திருப்பணிகள், வேண்டுதல்களுக்காக சேமித்துவைத்த, ஒரு லட்சம் ரூபாயை பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட வழங்கியுள்ளார்.தாயம்மாள் கூறியதாவது:திருப்பூர் கலெக்டர் வினீத் நேரில் அலுவலகம் வரவழைத்து பொன்னாடை அணிவித்து, பாராட்டினார். அவரிடம் பள்ளி கட்டடப்பணிகளை விரைந்து முடித்து மாணாக்கர்கள் பயன்பாட்டிற்கு வழிவகை செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன்.
மேலும் இடப்பற்றாக்குறை இப்பள்ளிக்கு பெரிய குறைபாடாக உள்ளது.தற்போது உள்ளூர் குழந்தைகளுக்கு சரி சமமாக வெளியூர் குழந்தைகளும் அதிகளவில் சேர்வதால் இதை உயர்நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்; அரசு மூலமாக புதிதாக இடமும் வழங்கினால் உதவியாக இருக்கும். இவ்வாறு அவரவர் படித்த பள்ளிகளுக்கு அனைவரும் உதவ முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தான் தினசரி செய்துவரும் இளநீர் வியாபாரம் மூலம் கிடைக்கும் தொகையினை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்துவதே சிரமமான சூழ்நிலையில், இவரது சேமிப்பு பணத்தை எதிர்கால குழந்தைகளின் கல்வியறிவிற்காக வழங்கியதை, அப்பள்ளியினர் மட்டுமின்றி ஊர் மக்களும் பாராட்டி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE