ஆர்.சதீஷ்குமார், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்...' என, நாடு விடுதலை பெறும் முன்பே, அதை கணித்து கொண்டாடியவர் மகாகவி பாரதியார்.
அவரின், 'சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம்...' என்ற கனவு மட்டும், நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவேறவில்லை.நம் அண்டை நாடான இலங்கைக்கு பாலம் அமைக்க, காங்கிரஸ் ஆட்சியில் ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என தெரியவில்லை.
கடந்த 2015ல், பா.ஜ., தலைமையிலான மத்திய அரசு, ஆசிய வங்கியின் 22 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு சாலை அமைக்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்தது.இந்த சாலை, 22 கி.மீ.,க்கு அமையும். கடலுக்கு மேல் பாலம் அமைத்தும், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்தும், இந்த சாலை திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது என, மத்திய அரசு அப்போது தெரிவித்தது.அத்திட்டம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.
இயற்கையாகவே நம் நாட்டிற்கும், இலங்கைக்கும் பல தொடர்புகள் உண்டு. ராமர் பாலம் இருந்ததற்கான சுவடுகள் தற்போதும் இருப்பதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைத்தால், தமிழகம் மட்டுமின்றி தேசத்திற்கே வளம் பெறும். சுற்றுலாத்துறையும் மிகப்பெரிய வளர்ச்சியடையும்.சீனாவின் நயவஞ்சக செயலில் சிக்கி, இலங்கையின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.
அதிக அளவில் வட்டிக்கு நிதி உதவி செய்து, இலங்கையை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர, சீனா நினைக்கிறது.சீனாவின் கோரப்பிடியில் இலங்கை சிக்கினால், நம் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.அதனால் ராமேஸ்வரம் - -இலங்கை பாலம் திட்டத்தை நிறைவேற்றினால், நம் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
'கடைசி பெஞ்ச் மாணவர்கள்!
'பெ.பரதன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உலக பொருளாதார அமைப்பு கூட்டத்தில், பிரதமர் மோடி சிறப்புரையாற்றிய போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தடையை கிண்டல் செய்த ராகுல் மற்றும் காங்., மூத்த தலைவர்களின் செயல் அருவருக்கத்தக்கது.
இது, அவர்களின் பொறாமை உணர்ச்சியையும், கையாலாகாத்தனத்தையும் காட்டுகிறது. உலகத் தலைவர்கள் வரிசையில், பிரதமர் மோடியின் அசுர வளர்ச்சியை விரும்பாத, அவர்களின் வயிற்றெச்சல் அப்பட்டமாக தெரிகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரை தலைமையிடமாக உடைய உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில், நம் பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக சிறப்புரையாற்றினார்.
வழக்கமாக, 'டெலிபிராம்ப்டர்' என்ற சாதனத்தின் உதவியுடனே பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக உரையாற்றுவார். இந்த சிறப்புரையின் போது, அந்த சாதனத்தில் பிரச்னை ஏற்பட்டதாக தெரியவில்லை.பிரதமர் மோடி ஹிந்தியில் பேசுவது, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, அந்த வாசகங்கள் வீடியோவிற்கு கீழே இடம் பெறும்.
பிரதமர் மோடி பேசத் துவங்கிய பின், மொழிபெயர்ப்பாளருடனான தொடர்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்த தடங்கல் நிகழ்ந்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தன் பேச்சை நிறுத்தியுள்ளார்.சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட, பிரதமர் மோடி மறுபடியும் தன் பேச்சை முதலிலிருந்து ஆரம்பித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பேச்சில் தடை என்பது குளறலோ, நடுக்கமோ கிடையாது; திறம்பட தயாரித்த உரையை, அவர் மறக்கவும் இல்லை.தொழில்நுட்ப கோளாறால் தான் அந்த தடங்கல் ஏற்பட்டது என்பது தெரிந்தும், 'கடைசி பெஞ்ச் மாணவர்கள்' போல, ராகுல் மற்றும் காங்., தலைவர்கள் கிண்டல் செய்த விதம், அவர்களின் சிறுபிள்ளைத்தனத்தையே காட்டுகிறது.
அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், உலக விஷயங்களைப் பொறுத்தவரை நம் பிரதமரை விட்டுக் கொடுக்காமல் பாராட்டியும், வாழ்த்துகளையும் தெரிவிக்க வேண்டுமே தவிர கிண்டல், கேலி செய்வது நாகரிகம் அல்ல.இதை ராகுலும், காங்., தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
திருமாவுக்கு தைரியம் இருக்கிறதா?
எஸ்.கண்ணம்மா, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில், புதிய மருத்துவக் கல்லுாரிகளை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, தமிழில் 'வணக்கம்' கூறினார்; தமிழின் பெருமையை பேசினார். ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையான, 'நீட் வேண்டாம்' என்ற கோரிக்கையை மட்டும் பொருட்படுத்தவில்லை' என்று, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
முதலில், நீட் குறித்த கேள்வி அனைத்தையும், வி.சி.,யின் கூட்டணி கட்சியான காங்கிரசிடம் தான் கேட்க வேண்டும்; வி.சி.,க்கு தேர்தலில் 'சீட்'டும் கொடுத்து, சின்னமும் கொடுத்த தி.மு.க.,விடம் தான் கேட்க வேண்டும்.ஏனென்றால் நீட் தேர்வுக்கு அடித்தளமிட்டது காங்கிரசும், தி.மு.க.,வும் தான்.'தமிழகத்திற்கு நீட் வேண்டாம்' என்று நீதிமன்றம் சென்ற போது, 'நீட் அவசியம் வேண்டும்' என்று வாதாடி, அதில் வெற்றி பெற்றவர், காங்., முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி தான்.
முதல்வர் ஸ்டாலின், 'நீட் வேண்டாம்' என, 11 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினாரே... அது என்னவாயிற்று?பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற காங்., ஆளும் மாநிலங்களில், நீட் எதிர்ப்பு இல்லையே... ஏன்?நீட் குறித்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,விடம் கேள்வி கேட்க, வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு தைரியம் இருக்கிறதா?
அப்புறம் முக்கியமான விஷயம்...'நீட் வேண்டாம்' என்பது தமிழகத்தின் ஒட்டு மொத்த கோரிக்கை இல்லை மிஸ்டர் திருமாவளவன். அது அரசியல் காரணங்களுக்காக நீங்களும், உங்கள் கூட்டணி கட்சிகளும் முன்வைக்கும் கோரிக்கை.ஏனென்றால், தமிழக மாணவர்கள் எப்போதோ நீட் தேர்வில் சாதனை படைக்க ஆரம்பித்து விட்டனர்.
எங்கள் குழந்தைகள் அறிவாளிகள்.மேலும், 15 மருத்துவக் கல்லுாரிகள் வருகின்றன. கூடுதலாக, 1,450 இடங்கள் கிடைக்கப் போகின்றன. ஏழை, எளியோரின் குழந்தைகளும், மருத்துவம் படிக்கும் நேரம் வந்து விட்டது.கார்த்திக் சிதம்பரம் போல, நுழைவுத் தேர்வுக்கு பயந்து அமெரிக்காவில் போய் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.திருமாவளவன் அவர்களே... எல்லாவற்றையும் நாங்கள் நினைவில் வைத்திருப்போம்.
தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்கும் முன்...
டி.ஈஸ்வரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ள கருத்துக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு ஞானோதயம் வந்து அறிக்கை வெளியிடுகிறார்.
ஒரு மாவட்ட செயலர் முதலில் ஊடகங்களில் அறிக்கை வெளியிடுகிறார். அதன் பின், கட்சி ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிடுகிறார். அ.தி.மு.க.,வில் தற்போது எல்லாமே தலைக்கீழாக தான் நடக்கிறது. அரசு செய்தி குறிப்பில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதிய, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி படங்கள் வாயிலாக, எம்.ஜி.ஆர்., தனக்கென தனி இடம் பெற்றார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படங்கள் வருவதற்கு முன்னரே, எம்.ஜி.ஆர்., திரை உலகில் கோலோச்சினார் என்று, ஜெயக்குமார் கூறுகிறார்.
'கருணாநிதி கதை, வசனம் எழுதிய படத்தின் வாயிலாகத் தான், எம்.ஜி.ஆர்., திரை உலகில் அறிமுகமானார்' என்று குறிப்பிட்டு இருந்தால் தான், அது தவறு.'சென்னை கிண்டியில் உள்ள மருத்துவ பல்கலைக்கு, எம்.ஜி.ஆர்., பெயரை சூட்டியது, கருணாநிதி தான்' என்கிறது, அரசு செய்திக் குறிப்பு.'எம்.ஜி.ஆர்., உயிருடன் இருக்கும் போதே, அந்த பெயர் முடிவு செய்யப்பட்டது' என்று மறுத்திருக்கிறார், ஜெயக்குமார்.
சரி, அப்படியே இருக்கட்டும்...எம்.ஜி.ஆர்., மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, பல்கலையின் பெயரை மாற்றவில்லையே!மேலும் அப்பல்கலையில், எம்.ஜி.ஆர்., சிலையை நிறுவிய, கருணாநிதி செயலை, அ.தி.மு.க., வரவேற்க வேண்டுமே தவிர, அதில் குறையை தேடக் கூடாது.அது எல்லாம் சரி... கடந்த ஐந்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை பொது மக்களுக்கு நினைவுப்படுத்தும் வகையில், அரசு செய்தி குறிப்பு ஏதும் வெளியிட்டது உண்டா?
'எம்.ஜி.ஆருக்கு, 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை, கருணாநிதி வழங்கினார்' என்று அரசு செய்திக்குறிப்பு சொல்கிறது. 'இது கட்டுக்கதை' என்கிறார், பன்னீர்செல்வம்.உறந்தை உலகப்பன் என்பவர் தான், எம்.ஜி.ஆருக்கு, 'புரட்சி நடிகர்' என்ற பட்டத்தை உருவாக்கினார்; அப்பட்டத்தை கருணாநிதி ஒரு விழாவில், எம்.ஜி.ஆருக்கு வழங்கினார்.'சிறுவயதில், கருணாநிதி எழுதிய வசன புத்தகங்களை படித்து மனப்பாடம் செய்திருக்கிறேன்' என, பன்னீர்செல்வம் சட்டசபையில் வாக்குமூலம் தந்திருக்கிறார்.
கருணாநிதியிடம் எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத ஓ.பன்னீர்செல்வமே, அவரது வசனத்தை பெருமையாக சொல்கிறார். அப்படி இருக்கும் போது, 'எம்.ஜி.ஆர்., படத்திற்கு கதை, வசனம் கருணாநிதி எழுதினார்' என்று தி.மு.க., பெருமையாக கூறுவதில் என்ன தவறு?அ.தி.மு.க.,வினர் முதலில் எம்.ஜி.ஆர்., வாழ்க்கை மற்றும் கட்சி வரலாற்றையும் நன்கு படிக்க வேண்டும்; அதன் பின், தி.மு.க.,விற்கு பதிலடி கொடுக்கட்டும்.
ஏதோ சொல்றதை சொல்லிப்புட்டோம்...
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில், அனாவசியமான செலவுகளைக் குறைப்பது எப்படி என்று ஆலோசனை கூறுங்கள்' என்று, பொருளாதார வல்லுனர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
இறந்த தலைவர்களுக்கு நினைவாலயம், மணிமண்டபம், சிலை அமைப்பது என, கோடி கோடி ரூபாய் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.'இலவசம்' என்ற பெயரில் நாறிப்போன பொருட்களைக் கொடுத்து, அதன் வாயிலாக மக்களிடம் கெட்ட பெயர் வாங்குவதை இனியாவது நிறுத்த வேண்டும்.பயிர்க்கடன், நகைக்கடன் என, விதவிதமாக கோடிக்கணக்கான ரூபாயை வாரி வழங்குவதையும், பின் அதைத் தள்ளுபடி செய்வதையும் தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஏராளமான சலுகைகளை நிறுத்தினாலே, அனாவசியமான செலவுகள் பாதியாகக் குறைந்து விடும். 'நஷ்ட ஈடு, விருது' என்ற பெயரில் வழங்கப்படும் செலவுகளை குறைக்க வேண்டும்.
போடாத சாலை, துார் வாரப்படாத கால்வாய் இவற்றுக்கு எல்லாம், மக்கள் வரிப்பணத்தை வாரி இரைப்பதை நிறுத்த வேண்டும்.மத்திய அரசுடன் அற்ப விஷயத்துக்கு எல்லாம் மல்லுக்கட்டி நிற்பதை நிறுத்தி, சுமுகமான உறவை பேணி, வேண்டிய நிதியைப் பெற முயற்சிக்க வேண்டும். திட்டங்களுக்கு ஒதுக்கப்படும்
நிதியை, ஆளுங்கட்சியினர், 'ஆட்டையை' போடுகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். 'மலை முழுங்கி மகாதேவன்களை' அடையாளம் கண்டு, அவர்களைக் களை எடுக்க வேண்டும். மணல், கல் குவாரி கொள்ளையில் ஈடுபடும் மாபியாக்களை, தயவு தாட்சண்யம் காட்டாமல் தண்டிக்க வேண்டும்.
இப்படி எல்லாம் செய்தால், கட்சிக்காரர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடுமே என்று, தி.மு.க., அரசு கவலைப்படக்கூடாது.கட்சி முக்கியமல்ல... ஆட்சி தான் முக்கியம் என்ற சிந்தனை, முதல்வர் ஸ்டாலினுக்கு வர வேண்டும்.இவற்றை எல்லாம் செய்தால், தமிழக அரசின் கடன் சுமை 'மளமள'வென குறையும்.ஏதோ சொல்றதை சொல்லிப்புட்டோம்... கேட்பதும், கேளாமல் ஒதுங்கி கொள்வதும் முதல்வர் ஸ்டாலினின் விருப்பம்!
நுாதன கொரோனா மோசடி!
சுப்ர.அனந்தராமன், சென்னையிலிருந்து எழுதிய கடிதம்: எனக்கு உடல் அசதியாக இருந்ததே தவிர, கோரோனா அறிகுறி ஏதும் இல்லை. அரசு சார்பில் அமைக்கப்பட்ட மையத்தில் பரிசோதனை செய்த போது, எனக்கு கொரோனா தொற்று இருப்பதாக சான்றிதழ் அளிக்கப் பட்டது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றேன். 1.5 லட்சம் ரூபாய் செலவாகியது.
பின், 'கொரோனா தொற்று இல்லை' என சான்றிதழ் அளித்து, என்னை வீட்டிற்கு அனுப்பினர். முதலிலேயே, தனியார் மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்திருந்தால், எனக்கு 1.50 லட்சம் ரூபாய் செலவாகி இருக்காது.மாநகராட்சி சுகாதார அலுவலர் பெறும் சில ஆயிரம் ரூபாய் லஞ்சத்திற்காக, அப்பாவி பொதுமக்களிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கொள்ளையடிக்க வழி செய்கின்றனர் என்பதில், சந்தேகமே இல்லை.நாடு முழுதும் கொரோனா பரிசோதனை முறையாக நடக்கிறதா என, ஆய்வு செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE