சென்னை-சென்னையில் சீருடை அணியாதது உள்ளிட்ட விதி மீறல்களுடன், ஆட்டோ ஓட்டுனர்களின் அநாகரிக செயல்கள் தொடர்கின்றன. போக்குவரத்து விதிமுறைகளின்படி, ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும். அதில், பயணியருக்கு தெரியும்படி, அவரவர் பெயரில், 'நேம் பேட்ஜ்' அணிந்து இருக்க வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்தி, பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது.
இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளுக்கும், நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல, ஆட்டோ ஓட்டுனர்கள் எதையும் பின்பற்றுவது இல்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரும், வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனால், ஆட்டோ ஓட்டுனர்களின் விதி மீறல்கள் தொடர்கின்றன. சென்னையில் நேற்று தி.நகர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில், லுங்கி அணிந்து பலர் ஆட்டோ ஓட்டிச் சென்றனர். சிலர் புகையிலை பொருட்களை உபயோகித்தபடி ஆட்டோ ஓட்டிச் சென்றனர். ஆட்டோக்களில் ஏறவே பலரும் அஞ்சும் வகையில், ஓட்டுனர்களின் செயல்பாடுகள் உள்ளன.
இதனால், ஆட்டோ பயணத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. 'ஊரடங்கு காரணமாக, சென்னை முழுதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்துள்ளோம்; தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறோம்' என்று போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், போலீசாரின் கண்களில் அநாகரிக ஆட்டோ ஓட்டுனர்கள் தெரியாமல் போவது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஆட்டோ ஓட்டுனர்கள் மாற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement