குப்பண்ணா வீட்டு மொட்டை மாடியில், பில்டர் காபியும் கையுமாக கூடிய பெரியவர்கள் மத்தியில், ''பனிப்போருக்கு முடிவு கட்டலைன்னா, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல ஊத்திக்கும்னு தலைமைக்கு தகவல் போயிருக்குதுங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.
''எந்தக் கட்சியில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''நீலகிரி மாவட்ட தி.மு.க.,வுல, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலர் முபாரக்னு ரெண்டு கோஷ்டி இருக்குதுங்க... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிட்டு இருக்கிற சூழல்ல, 'மாவட்டச் செயலர் தரப்பு எல்லாத்தையும் பார்த்துக்கும்'னு, தேர்தல் பணிகள்ல ஆர்வம் காட்டாம அமைச்சர் கோஷ்டி ஒதுங்கி இருக்குதுங்க...
''ரெண்டு தரப்பு பூசலையும் தீர்த்து வைக்கலைன்னா, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல, நம்ம வெற்றி கேள்விக்குறி தான்னு, கட்சி நிர்வாகிகள் பலர், தலைமைக்கு தகவல் அனுப்பியிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ரசீது தராம பணத்தை வாங்கிட்டு போறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...
''கோவை மாநகராட்சி பகுதியில, தனியார் நிறுவனங்கள், கடைகள், பேக்கரிகள்ல மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்றாங்க... கொரோனா தடுப்பு அம்சங்களை மீறினா அபராதம், குறிப்பிட்ட நாட்கள் கடையை மூடுறதுன்னு நடவடிக்கை எடுத்துட்டு இருக்காங்க பா...
''அதே மாதிரி, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் குறித்தும் தனியா ஆய்வு செய்றாங்க... சில அதிகாரிகள், விதிகளை மீறுவோரிடம், 'பெரிய அபராதம் கட்டுறீங்களா, சின்ன அபராதம் கட்டுறீங்களா'ன்னு கேட்டு, ரசீது இல்லாம பணத்தை வாங்கி, பாக்கெட்டுல போட்டுக்கிறாங்க பா...
''இன்னும் சில அதிகாரிகள், அவங்க வார்டுகளை தாண்டி வேற வார்டுகள்ல போயும் வசூல் வேட்டை ஆடுறாங்க... பாவம், வியாபாரிகள் எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''அமைச்சரவையில மாற்றம் வரும்னு தகவல்கள் வரதே... நிஜம்தானா அண்ணாச்சி...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''அமைச்சரவையில மந்தமான சிலரை துாக்கிட்டு, புதுசா சிலருக்கு வாய்ப்பு தரலாம்னு முதல்வர் ஸ்டாலின் நினைக்காரு... கிருஷ்ணகிரி மாவட்டத்துல, ஓசூர் எம்.எல்.ஏ., பிரகாஷ், பர்கூர் எம்.எல்.ஏ., மதியழகன் பெயர்களும் அடிபடுது வே...
''இதுல, பிரகாஷ் மாவட்ட செயலருங்கிற முறையில, அவருக்கு அதிக வாய்ப்பிருக்காம்... அவரும், பெங்களூர்ல இருக்கிற முதல்வரின் உறவினர்கள் சிலர் மூலமா காய் நகர்த்திட்டு இருக்காரு வே...
'கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தேர்தல்ல ஜெயிச்சிருந்தா கண்டிப்பா அமைச்சராகியிருப்பாரு... அவர் தோத்துட்டதால, பிரகாஷுக்கு வாய்ப்பு பிரகாசமா இருக்கு'ன்னு, அவரது ஆதரவாளர்கள் சொல்லுதாவ வே...'' என முடித்தார் அண்ணாச்சி.
அரட்டை முடியவும் பெரியவர்கள் கிளம்ப, குப்பண்ணா வீட்டுக்குள் சென்றார்.
'கட்டிங்' எதிர்பார்ப்பில் கையெழுத்து போடாத அதிகாரி!
''எதிர்க்கட்சியா இருந்தாலும், புகுந்து விளையாடுதாங்கல்லா...'' என்றபடியே, 'கான்பரன்ஸ் காலில்' வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''நீலகிரி மாவட்டம், குன்னுார் ஒன்றியத்துல இருக்கிற ஒரு ஊராட்சி தலைவி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவங்க... இவங்க, ஊராட்சி வளர்ச்சி பணிகளை, தன் வீட்டுக்காரர் மற்றும் பினாமி பெயர்கள்ல டெண்டர் எடுத்து, லட்சக்கணக்குல வாரி குவிச்சிட்டு இருக்காங்க வே...''ஊராட்சி பகுதியில, 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை மீறி கட்டடங்களுக்கு அனுமதி குடுத்துட்டு இருக்காங்க... கட்டட பட்ஜெட்டை பொறுத்து, ஊராட்சி தலைவிக்கு, 'கவனிப்பு' கிடைச்சிடுது வே...''இது சம்பந்தமா, கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு வரைக்கும் புகார்கள் போயிட்டு... சீக்கிரமே நடவடிக்கை வரும்னு சொல்லுதாவ வே...'' என்றார் அண்ணாச்சி.''நேத்து ரேணுகாதேவி வீட்டு பங்ஷனுக்கு போனீங்களா...'' எனக் கேட்ட அந்தோணிசாமியே, ''யாரோ செஞ்ச தப்புக்கு பெண் எஸ்.ஐ.,யை 'சஸ்பெண்ட்' பண்ணிட்டதா புலம்புறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.''என்ன விவகாரம்னு விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''நாமக்கல் பக்கம் சேந்தமங்கலத்துல, மளிகை கடை உரிமையாளர் வீட்டுல நகை திருடியதா, மாற்றுத்திறனாளி பிரபாகரன், அவரது மனைவி ஹம்சாவை போலீசார் கைது செஞ்சாங்க... இதுல, பிரபாகரன் இறந்து போயிட்டதால, சேந்தமங்கலம் எஸ்.ஐ., சந்திரன், ஏட்டு குழந்தைவேல் மற்றும் புதுச்சத்திரம் ஸ்டேஷன் எஸ்.ஐ., பூங்கொடி ஆகியோரை 'சஸ்பெண்ட்' செய்தாங்க...''இதுல, எஸ்.ஐ., சந்திரன், ஏட்டு குழந்தைவேல் ரெண்டு பேரும், வழக்கு பதிவான ஸ்டேஷன்ல வேலை பார்க்கிறாங்க... பெண்ணை கைது செய்ய பெண் அதிகாரி வேணும்கிறதால, புதுச்சத்திரம் எஸ்.ஐ., பூங்கொடியை அழைச்சிட்டு போயிருக்காங்க... அவங்களும் ஹம்சாவை கைது பண்ணி, சேந்தமங்கலத்துல விட்டுட்டு போயிட்டாங்க...''ஆனா, இப்ப பூங்கொடியையும் சேர்த்து 'சஸ்பெண்ட்' பண்ணிட்டதுல, சக போலீசார் அதிருப்தியில இருக்காங்க... தங்களது அதிருப்தியை, உயர் அதிகாரிகளுக்கு கடிதமா அனுப்பியிருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.''இந்த கட்டிங் அதிகாரி கதையை கேளுங்க பா...'' என்று அன்வர்பாயே தொடர்ந்தார்...''திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில இருக்கிற அதிகாரி ஒருத்தர், மத்திய அரசின், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்துல பணிகள் முடிஞ்சும், அதுக்கான பில் பாஸ் பண்ண, கையெழுத்து போடாம இழுத்தடிக்காரு பா...''இவர் ஒப்புதல் தந்தா தான், திட்ட இயக்குனர் பில் தொகையை வழங்க முடியும்... ஆனாலும், 'கட்டிங்' எதிர்பார்ப்புல கையெழுத்து போடாம, பல பைல்களை கிடப்புல போட்டிருக்காரு பா... ''பணிகளை எடுத்து செய்தவங்க, பி.டி.ஓ.,க்களை போட்டு நெருக்குறாங்க... அவங்களோ, இப்படியே இழுத்தடிச்சா, கலெக்ரிடம் நேர்ல போய் புகார் குடுத்துடலாம்கிற முடிவுல இருக்காங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.''சடையப்பன் லைன்ல வரார்... அப்புறம் பேசறேன் ஓய்...'' என்றபடியே குப்பண்ணா 'கட்' செய்ய, மற்றவர்களும் இணைப்பை துண்டித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE