தேனி-தேனி மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின்போது சுகாதாரத்துறையில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை செய்து கலெக்டர் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கொரோனா 2ம் அலையின்போது தேனி மாவட்டத்துக்கு உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் வாங்க தமிழக அரசு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்தது. மேலும் தேசிய சுகாதார திட்ட நிதியும் பயன்படுத்தப்பட்டது. இதில் ரூ.65 லட்சத்துக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.கொரோனா கட்டுப்பாட்டு அறையின் உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான நிதியை கம்ப்யூட்டர் சரிசெய்ததாகவும், தஞ்சாவூரில் இருந்து அதிக விலைக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கியதாகவும், நன்கொடையில் கிடைத்த உபகரணங்களை சுகாதாரத்துறை வாங்கியதாகவும் கணக்கு காட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க கலெக்டர் முரளீதரன் விசாரணை குழு அமைத்தார். இந்த விசாரணை குழு விசாரித்து சமீபத்தில் கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் முறைகேடு புகார் தொடர்பான விபரங்கள் அடங்கியுள்ளன. இந்த அறிக்கையை கலெக்டர் பொதுசுகாதாரத்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ளார். இந்த முறைகேடு புகார் 2021 மே முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் எழுந்தது. அப்போது மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனராக ரமேஷ்குமார், தேசிய சுகாதார திட்டத்தில் மனோஜ்குமார் பணியாற்றினர். இவர்கள் தற்போது வேறு மாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். உதவியாளர் ரவி கண்டமனுாருக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE