குடியரசு தின அலங்கார ஊர்தி விவகாரத்தில், உரிய விதத்தில், உரிய நேரத்துக்குள் விளக்கங்களையும், பதில்களையும் அனுப்பாமல் தமிழக அரசின் செய்தித் துறை சொதப்பி விட்டதாக புகார்
எழுந்துள்ளது.
புறக்கணிப்பு
குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. டில்லி விழாவில் பங்கேற்பதற்காக உருவாக்கப்பட்ட அலங்கார ஊர்தி, சென்னையில் நடக்கும் குடியரசு தினவிழாவில் இடம் பெறும்; தமிழகம் முழுதும் காட்சிப்படுத்தப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகம், கேரளம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஊர்திகளை, மத்திய பா.ஜ., அரசு திட்டமிட்டே புறக்கணித்து உள்ளதாக, தி.மு.க., மற்றும் கூட்டணிக்
கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.சில மாநிலங்களுக்கு மட்டுமே, வாய்ப்பு தர முடியுமென்ற சூழ்நிலையில், காங்., அரசு இருந்தபோதும், பல முறை தமிழகத்தின் அலங்கார ஊர்திகளுக்கு
வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் பலர் சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த 2009ல் குடியரசு தினவிழாவின்போது, மத்தியில் காங்., தலைமையிலான அமைச்சரவையில், தி.மு.க., அங்கம் வகித்தபோது, தமிழகத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார்.
அப்போது, திருப்பூர் குமரன் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை, அதன் வடிவமைப்பில் பங்கேற்ற, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது நினைவு கூர்ந்துள்ளார்.
நடந்தது என்ன?
அரசியல்ரீதியாக இந்த விவாதங்கள் சூடு பிடித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செய்தித் துறை சொதப்பியதை எல்லாரும் மறந்து விட்டதாக, தமிழக ஐ.ஏ.எஸ்.,
வட்டாரங்களில் முணுமுணுப்பு எழுந்துள்ளது. இது குறித்து, டில்லி விவகாரங்களை அறிந்த தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
வழக்கமாக, ஜன., 26ல் நடக்கும் குடியரசு தின விழாவுக்கான அலங்கார ஊர்திகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், செப்டம்பரிலேயே துவங்கிவிடும். மத்திய அரசின் உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தான், இதை நடத்தி குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வர். இந்த ஊர்திகளை, இத்துறை அமைக்கும் நிபுணர்கள் குழுவே இறுதி செய்யும். அனைத்து மாநிலங்களின் செய்தித் தொடர்புத் துறை இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகள் பங்கேற்று, தங்கள் மாநிலம் சார்பில் கொண்டு வரப்படும் அலங்கார ஊர்தி குறித்து, தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து முன்வரைவை சமர்ப்பிப்பர்.
ஆலோசனைக் கூட்டம்
அதில் நிபுணர் குழு சில திருத்தங்களைத் தெரிவிக்கும். அதன்படி, இறுதியில் '3 டி' மாடலை சமர்ப்பிக்க வேண்டும். அதை நிபுணர்கள் குழு ஏற்கும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட அலங்கார ஊர்தி இடம்பெறும் தகவல், ஜனவரியில் தான் தெரிவிக்கப்படும். இந்த ஆண்டிலும் அதே போலத்தான் நடந்துள்ளது. பல கட்டங்களாக நடந்த ஆலோசனைக் கூட்டங்களில், தமிழக அரசின்
செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன் இருமுறை பங்கேற்றுள்ளார். அதன்பின், உதவி இயக்குநர் பொன் முத்தையா என்பவர்தான் கலந்து கொண்டுஉள்ளார்.
இதில், தமிழக அரசின் சார்பில் இடம் பெறும் அலங்கார ஊர்தியில், முதலில் வ.உ.சிதம்பரனார், அதன்பின் பாரதியார், மூன்றாவதாக வேலு நாச்சியார், நான்காவதாக மருது சகோதரர்கள் சிலைகள் இடம் பெறுவது போன்று மாதிரி முன்மொழியப்பட்டு உள்ளது.
உரிய விளக்கம்
ஆனால் வ.உ.சி.,யை விட பாரதியார் தான், தேசிய அளவில் தெரிந்த தலைவர் என்பதால் அவரை முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி மாற்றி அமைத்திருக்க வேண்டும். அல்லது தமிழக அரசின் செய்தித் துறை சார்பில், வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களை, வரலாற்றை விளக்கி, உரிய பதிலை அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், உரிய விளக்கத்தை உரிய முறையில் அனுப்பியதாகத் தெரியவில்லை. அதனால்தான், ஜனவரியில் தான் தமிழக ஊர்திக்கு அனுமதியில்லை என்ற தகவலே முதல்வருக்குத் தெரியவந்து உள்ளது.
இதில், தமிழக அரசின் செய்தித் துறை அதிகாரிகள்தான் சொதப்பியுள்ளனர். அவர்கள் மீது தான், முதல்வர் முதலில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
'இந்த விவகாரத்தில், தமிழக அரசின் செய்தித் துறை மீது தவறு இருக்க, தி.மு.க., தரப்பு
அரசியல் செய்து பிரச்னையை திசை திருப்புகிறது' எனவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டுகின்றன.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE