பணஜி;, கோவாவில் சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 34 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பா.ஜ., அறிவித்துள்ளது. தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தி அடைந்த முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர், பா.ஜ., விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
![]()
|
ஏற்கனவே, முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கரின் மகன் உத்பால் பா.ஜ.,விலிருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், லட்சுமிகாந்தின் அறிவிப்பு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில் அடுத்த மாதம் 14ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், 34 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ., நேற்று முன்தினம் அறிவித்தது. மாநிலத்தில் பா.ஜ.,வின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர், மறைந்த முன்னாள் முதல்வர் மனோகர் பரீக்கர். இவரது மகன் உத்பால், தன் தந்தை 20 ஆண்டுகளுக்கு மேல் எம்.எல்.ஏ.,வாக இருந்த பணஜி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். வாய்ப்பு மறுக்கப்பட்டதால் பா.ஜ.,விலிருந்து விலகுவதாக உத்பால் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் பா.ஜ.,விலிருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் நேற்று அறிவித்தார். கோவா முதல்வராக 2014 - 17 வரை பதவி வகித்த லட்சுமிகாந்த் பர்சேகர் இது குறித்து கூறியதாவது:உண்மையாக உழைப்பவர்களுக்கு கட்சி மேலிடம் மரியாதை அளிக்கவில்லை. இதனால் பா.ஜ.,வில் நீடிக்க விரும்பவில்லை. கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, விரைவில் தெரிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். கோவா தேர்தலுக்கான பா.ஜ., அறிக்கைக் குழுவின் தலைவராகவும், கட்சியின் மையக் குழுவின் உறுப்பினராகவும லட்சுமி காந்த் இருந்து வந்தார்.
கடினமான முடிவு
இதற்கிடையில் பா.ஜ.,விலிருந்து விலகியது பற்றி உத்பால் கூறியதாவது:பா.ஜ.,விலிருந்து விலகுவேன் என நினைத்துக் கூட பார்த்தது இல்லை. அதிலிருந்து விலகியது மிகவும் கடினமான முடிவு. பணஜி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன். எனினும் பணஜியில் சிறந்த வேட்பாளரை கட்சி நிறுத்தினால், தேர்தலில் போட்டியிட மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகுவது, தேர்தல் களத்தில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேர்தல் 'ஹைலைட்ஸ்' உத்தர பிரதேசத்தில் பரேலி கன்டோன்மென்ட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுப்ரியா ஆரோன், சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தார் உத்தரகண்டில் 70 உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபைக்கு அடுத்த மாதம் 14ல் தேர்தல் நடக்கிறது. 59 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ., நேற்று முன்தினம் அறிவித்தது. இதில் வாய்ப்பு வழங்கப்படாத தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் உட்பட மூத்த தலைவர்கள் பா.ஜ.,விலிருந்து விலகி காங்கிரசில் சேர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் இதுவரை 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் 119 வேட்பாளர்கள் புதுமுகங்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி ''உ.பி., சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடித்தால் இரண்டு முதல்வர்கள் நியமிக்கப்படுவர்,'' என, தெரிவித்துஉள்ளார்.
31 வரை தடை நீட்டிப்பு
நாடு முழுதும் கொரோனா பரவலை அடுத்து, தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களிலும் பேரணிகள், சாலையோர பிரசார கூட்டங்கள் நடத்த 22ம் தேதி வரை தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பேரணி நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடையை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதே நேரத்தில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரிக்க ஐந்து பேருக்கு மட்டுமே அளிக்கப்பட்டிருந்த அனுமதியை 10 பேராக தேர்தல் ஆணையம் அதிகரித்துள்ளது.
![]()
|
கர்ஹால் தொகுதியில் அகிலேஷ்முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில், 403 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 10ல் துவங்கி, மார்ச் 7 வரை ஏழு கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது.முதல்வர் யோகி ஆதித்யநாத் பா.ஜ., சார்பில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், 'சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என, முதலில் அறிவித்திருந்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடும்படி அவரை கட்சியினர் வலியுறுத்தினர்.தற்போது லோக்சபா எம்.பி.,யாக உள்ள அகிலேஷ், கர்ஹால் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE