வரும் ஜூலையில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக உள்ளார்.
![]()
|
பிரதமரின் முன் மூன்று முக்கிய பிரச்னைகள் தற்போது உள்ளன. முதலில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் அனைத்து தரப்பினரையும் திருப்தி செய்யக் கூடிய மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வது.பிப்., 1ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக பிரதமர் இரவு 9:00 மணியில் இருந்து 12:00 மணி வரை, நிதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.பட்ஜெட் தொடர்பான ஆவணங்களை வரிக்கு வரி படித்து தன் சந்தேகங்களை கேட்டு, அதில் தேவையான திருத்தங்களை கூறி வருகிறார்.
நிச்சயம் இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களை திருப்தி செய்வதாக இருக்கும். தமிழகத்துக்கு அதிக திட்டங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.உத்தர பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் இந்த பட்ஜெட்டில் பெரிய அளவில் வரி விதிப்புகள் இருக்காது என எதிர்பார்க்கலாம்.பிரதமர் சந்திக்கும் இரண்டாவது முக்கிய பிரச்னை ஐந்து மாநில தேர்தல். இதில், நாட்டில் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மிகத் தீவிரமாக உள்ளது.
தற்போது காங்., ஆளும் பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி முந்தி வருகிறது. அங்கு தொங்கு சட்டசபை அமைவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி, காங்., இடையே தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.அவ்வாறு இழுபறி நீடித்தால், அங்கு ஜனாதிபதியின் ஆட்சி அமைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பா.ஜ., ஆளும் உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநில சட்டசபைகளில் மூன்றில் பா.ஜ., வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாவில் இழுபறி நிலைமை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் நான்கு மாநிலங்களிலும் கட்சியின் வெற்றியை உறுதி செய்யும்படி மோடி உத்தரவிட்டுள்ளார். அதற்கான வியூகங்களை கட்சித் தலைவர் நட்டா, மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வகுத்து வருகின்றனர்.ஆலோசனைமார்ச், 10ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாக உள்ளன. அதற்கடுத்து மோடியின் முன் உள்ள மிகப் பெரிய பிரச்னை ஜனாதிபதி தேர்தல். ஜனாதிபதி தேர்தலில் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்களுடன் அனைத்து சட்டசபைகளின் எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளிக்க உள்ளனர்.
![]()
|
அதன்படி பார்த்தால் தமிழகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பை விட, உத்தர பிரதேசத்தில் அதிகமாக இருக்கும்.அதனால் தான் உத்தர பிரதேசத்தில் குறைந்தபட்சம், 250 தொகுதிகளில் வெற்றி பெற, மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதுபோல் மற்ற நான்கு மாநிலங்களிலும் அதிக எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தால், ஜனாதிபதி தேர்தலில் பெரும் உதவியாக இருக்கும்.
இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் புதிய தந்திரத்தை கடைப்பிடிக்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில குறிப்பிட்ட எதிர்க்கட்சிகளும் ஏற்கும் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த காலத்தில் அப்துல் கலாம் நிறுத்தப்பட்டதுபோல எதிர்க்கட்சிகளாலும் ஏற்கக் கூடிய ஒருவரை நிறுத்த திட்டமிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆலோசனை வழங்கும்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியிடம், பிரதமருக்கு மிகவும் நெருக்கமான மத்திய அமைச்சர் ஒருவர் பேசியுள்ளார். அதுபோலவே ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்கிடமும் பேசப்பட்டுள்ளது.இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தவும் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி தெலுங்கானா கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரது பெயர்கள் முன்னிலையில் உள்ளன.இவர்கள் தவிர, 'இன்போசிஸ்' நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி அல்லது 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் சிவம் பெயர்களும் பரிசீலனையில் உள்ளன.இந்தாண்டு இறுதியில் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. மேலும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தற்போதே தயாராக வேண்டிய நிலையில், பா.ஜ., உள்ளது. அதற்கு இந்த மூன்று பிரச்னைகளையும் பா.ஜ., தலைமையும், பிரதமரும் எப்படி சமாளிக்கப் போகின்றனர் என்பதில் இருந்து விடை கிடைத்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE