புதுடில்லி : ''மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும், மேம்படுத்தும் வகையிலும் கால நிர்ணயத்துடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ''நாடு முழுதும் சேவைகள் மற்றும் வசதிகளில் 100 சதவீதம் என்ற நிலையை எட்டுவதாக நம் இலக்கு இருக்க வேண்டும்,'' என, மாவட்ட கலெக்டர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

நாடு முழுதும் 112 மாவட்டங்களில் ஆர்வமுள்ள மாவட்டங்கள் என்ற திட்டம் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி அந்தந்த மாவட்டங்களில் அரசின் நல திட்டங்கள் வேகப்படுத்தப் பட்டுள்ளன.இந்த திட்டத்தை செயல்படுத்தும் கலெக்டர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் இடையே பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:இந்த திட்டத்தால் மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகள் ஒருமுகப்படுத்தப்பட்டு, வேகப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய - மாநில அரசுகள், மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிர்வாகம் இணைந்து செயல்பட்டு, மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.இத்தனை காலம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவை துாக்கியெறியப் பட்டுள்ளன. மேலிருந்து கீழ் மற்றும் கீழிருந்து மேலாக நிர்வாக செயல்பாடு இருந்து உள்ளது. மக்களுக்கும், அரசு நிர்வாகத்துக்கும் இடையே இருந்த தடைகள் தகர்த்தெறியப் பட்டுள்ளன.மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு செயலுக்கும் கால நிர்ணயம் செய்து நிறைவேற்ற வேண்டும். சேவைகள் மற்றும் வசதிகளில் 100 சதவீதம் என்ற சமநிலையை எட்டுவதாக நம் இலக்கு இருக்க வேண்டும்.இந்த திட்டத்தின் சிறப்பான செயல்பாடுகளால் மக்கள் மற்றும் அரசுக்கு இடையே இருந்த தடுப்புச் சுவர் நீக்கப்பட்டுஉள்ளது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது 11ஆக மாற்றமடைந்துள்ளது.
இதுதான் கூட்டு முயற்சியின் வெற்றி, வலிமை.பல்வேறு மத்திய அமைச்சகங்கள், துறைகள், 142 மாவட்டங்களின் பட்டியலை தயாரித்துள்ளன. இவை பின்தங்கிய மாவட்டங்கள் அல்ல. ஒரு சில காரணிகளில் மேம்பட வேண்டும். ஆர்வமுள்ள மாவட்டங்களைப் போல இந்த 142 மாவட்டங்களிலும் திட்டங்களை ஒருமுகப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE