சென்னை: முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல், ஆவணங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்படும் பொது நல வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. இதில், வழக்கறிஞர்கள் பெயரில் தாக்கலாகும் வழக்குகளும் விதிவிலக்கு அல்ல.
பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவது உண்டு. நீர்நிலை ஆக்கிரமிப்பு; மணல், கல்குவாரி; விதிமீறல் கட்டடங்கள்; கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னை என, வெவ்வேறு வகையான வழக்குகள் தாக்கலாகின்றன. இத்தகைய பொதுநல வழக்குகளில், உயர் நீதிமன்றம் விரிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகள் எல்லாம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதையும் நீதிமன்றம் கண்காணிக்கிறது. ஆனால் சமீபகாலமாக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பொது நல வழக்குகள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன.
அபராதம்
தினசரி, இரண்டு, மூன்று பொதுநல வழக்குகளாவது நிராகரிக்கப்படுகின்றன. வழக்குகளை விசாரிக்கும் போதே, இதில் பொது நலன் இருக்கிறதா; தனி நலன் சார்ந்ததா; விளம்பர நோக்கில் தொடரப்பட்டவையா என்ற முடிவுக்கு, நீதிபதிகள் வருகின்றனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இருந்த போது, பொதுநல வழக்குகள் என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட பல வழக்குகளை தள்ளுபடி செய்தார். வழக்கு தொடர்ந்தவர்களுக்கு, அபராதமும் விதிக்கப்பட்டது. அதற்கும் மேலாக, பொது நல வழக்கு தொடரவே, ஓராண்டு, இரண்டு ஆண்டுக்கு என தடையும் விதிக்கப்பட்டது.

தற்போது, பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எம்.என்.பண்டாரி தலைமையிலான அமர்விலும், பொதுநல வழக்குகளாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் விசாரணை, கண்டிப்புடன் கையாளப்படுகிறது.தனிப்பட்ட நலனுக்காக தொடரப்பட்டது என்று தெரிய வந்தால், அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக, நீதிபதிகள் எச்சரிக்கின்றனர். வழக்கு தொடர்ந்தவர்கள் உடனே வாபஸ் பெற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு தினசரி, பொதுநல வழக்குகள் என்ற பெயரில் தாக்கல் செய்யப்படும் பல வழக்குகள் வாபஸ் ஆகின்றன.
வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் கேட்கும் கேள்விகளுக்கு, வழக்கு தொடர்ந்தவர்களால் பதில் அளிக்க முடியாமல், அவகாசம் கோருகின்றனர்; ஆவணங்களை கோரினாலும் அவகாசம் கேட்கின்றனர். இதனால், முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல், தகவல்களை பெறாமல், பொதுநல வழக்கு தொடர்வதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், இரண்டு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுக்களை, அபராதத்துடன் தள்ளுபடி செய்யப் போவதாக நீதிபதிகள் எச்சரித்தனர். 'பொதுநல வழக்கு தவிர்த்து, வழக்காடிகளுக்காக எத்தனை வழக்கு தொடர்ந்துள்ளீர்கள்' என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வழக்கறிஞர்கள், பொது நல வழக்கு தொடர, உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கடைசியில், பொதுநல வழக்கை வாபஸ் பெற்றனர். பொதுநலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் தொடரும் வழக்குகளை, நீதிமன்றம் புறக்கணித்து விடவில்லை. முறையான ஆய்வு மேற்கொண்டு, தகவல்களை பெற்று தொடரப்படும் பொதுநல வழக்குகளை, நீதிமன்றம் கவனிக்கிறது.விளம்பர நோக்கில், பொது நலன் என்ற போர்வையில், தனி நலன் சார்ந்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரித்தால், நீதிமன்ற நேரம் வீணாவது மட்டுமின்றி, மற்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைக்கு எட்டாமல் போய் விடும்.
சாமானிய மக்கள்
இது குறித்து, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே.சக்திவேல் கூறியதாவது: தங்களுக்கான உரிமைகளை நிலைநாட்ட முடியாமல், நீதிமன்றத்தை அணுக முடியாத நிலையில் இருக்கும் சாமானிய மக்களின் பிரச்னைகளுக்காக, வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரலாம். அவ்வாறு தொடரும் போது, உரிய ஆதாரங்களை திரட்டி, தேவையான தகவல்களை பெற்றே, வழக்கு தொடர வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில், வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE