வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில், 68 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 12 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள். இரண்டு டோஸ் போட்டவர்கள் 16 சதவீதம் பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், இரண்டு டோஸ் போட்டும் கோவிட்டால் பாதித்தவர்கள் பெரும்பாலும் முதியவர்கள். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டும் 9 மாதங்கள் முடிந்தும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள்தான் பாதிப்பு அதிகமாக உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும், பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களுக்கும் ஒரே மாதிரியான பாதிப்பும் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும். கோவிட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் இணை நோய் உள்ளவர்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பை கண்காணித்து வருகிறோம்.
சென்னையில், கோவிட் பாதிப்பு குறைய துவங்கி உள்ளது. இதனை வெற்றியாக கருதாமல், கவனமாக இருக்க வேண்டும். கடந்த 15ம் தேதி 8,976 பேருக்கு கோவிட் உறுதியானது. இது 100ல் 30 சதவீதம். தற்போது இது 23.6 சதவீதமாக குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE