தஞ்சாவூர்: அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் பாலத்தில், 'ஹைட்ராலிக் ஜாக்கி'யில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'கான்கிரீட் செக்மென்ட்' கீழே விழுந்தது.
கடந்த 2017ம் ஆண்டு, 3,517 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தஞ்சாவூர் - விக்கிரவாண்டி இடையே 165 கி.மீ.,க்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம், நான்கு வழி சாலையாக மாற்றும் பணிகள் மூன்று பிரிவுகளாக துவங்கப்பட்டன. இதில், தஞ்சாவூர் மாவட்டம், தத்துவாஞ்சேரி முதல் அரியலூர் மாவட்டம், தென்னவநல்லூர் கிராமம் வரை, அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், 1.2 கி.மீ., நீளத்திற்கு புதிய பாலத்துடன் 5 கி.மீ., நீளத்திற்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2018ம் ஆண்டு முதல் பணிகள் நடந்து வருகின்றன. மொத்தம் 20 கான்கிரீட் தூண்கள் கொண்ட பாலத்தில், நேற்று முன்தினம், ஹைட்ராலிக் ஜாக்கி மூலம் பொருத்தப்பட்ட கான்கிரீட் செக்மென்ட்டில் 16 மற்றும் 17ம் தூண்களை இணைக்கும் பணியில், 15 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹைட்ராலிக் ஜாக்கியின் பிரஷர் குழாய் அறுந்து, பலத்த சத்தத்துடன் 15 அடி அகலமும், 50 மீட்டர் நீளமுள்ள கான்கிரீட் செக்மென்ட் ஆற்றில் விழுந்தது. உடனே தொழிலாளர்கள் தண்ணீரில் குதித்து உயிர் தப்பினர். இதில் புதிதாக கட்டப்பட்ட கான்கிரீட் தூண்களும் மற்றும் பாலமும் சிறியளவில் இடிந்து சேதம் அடைந்தன. தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஹைட்ராலிக் ஜாக்கியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கான்கிரீட் செக்மென்ட் ஒன்று ஆற்றில் விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால், பாலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விரைவில் சீர் செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறும்' என்றார்.