சென்னை : அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., நிறுவனம் 3வது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் 12,500 ஏக்கர் நிலத்தை கையகபடுத்த உள்ளது. சுரங்கத்திற்காக கையகபடுத்தப்படும் விளைநிலங்களுக்கு, ஏக்கருக்கு ரூ.23 லட்சம், வீட்டு மனைகளுக்கு ஊரக பகுதிகளில் சென்ட்டுக்கு ரூ.40 ஆயிரம், நகர பகுதிகளில் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும் என்றும் மறு குடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில் 1000 சதுர அடியில் வீடு கட்டி தரப்படும் என்றும், நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது என்றும் ஒப்பந்த வேலை வாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என என்எல்சி அறிவித்துள்ளது. மக்களிடம் கருத்து கேட்காமல் ஒரு தலைபட்சமாக மறு குடியமர்த்துதல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இதனை மக்கள் ஏற்கவில்லை.
என்எல்சி சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள், ஏக்கர் ஒன்றுக்கு, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் தரும் விளைச்சல் நிலங்களாகும். ஒரு ஏக்கர் நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு சுமார் ரூ. 50 லட்சத்திற்கு மேல் ஆகும். அதேபோல், இன்று ஒரு சென்ட் வீட்டு மனை நிலத்தின் சந்தை மதிப்பு ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை விலை உள்ளது. அதற்கேற்றவாறு நில இழப்பீட்டு மதிப்பை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.நிலம் வழங்கிய குடும்பத்தினருக்கு என்எல்சி நிறுவனம் நிரந்த வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இப்பகுதி மக்களின் நில இழப்பீடு மற்றும் நிலத்தை இழந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வேலை ஆகிய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் என் எல்சி நிறுவனத்தையும், இதற்கான முழு முயற்சிகளையும் இந்த திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE