தர்மபுரி: தமிழ்நாடு ஊராட்சிமன்றக்குழு தலைவர்கள் கூட்டமைப்பு தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 251 பஞ்சாயத்துக்களிலும், அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடந்த, 20ல் நடந்தது. மாவட்ட நிர்வாகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்., தலைவர்களை அவமதிக்கும் வகையில், இதற்காக தனி அலுவலர்களை நியமித்தது. இது தொடர்பாக, கலெக்டர் திவ்யதர்ஷியை சந்திக்க அனுமதிக்க கேட்டபோது, அவர் எங்களை சந்திக்க அனுமதி மறுத்தார். பஞ்சாயத்துகளுக்கு கடந்த இரு ஆண்டுகளாக போதிய நிதி ஒதுக்காததால், பெரும்பாலான பஞ்., தலைவர்கள் தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக, கடன் பெற்று, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர். இதற்கான நிதி விரைவில் ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் பஞ்., தலைவர்களில் உரிமையில் தலையிடும் வகையில், தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க, தனி அலுவலர்களை நியமித்து, கலெக்டர் திவ்யதர்ஷினி செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக, தற்போது, பஞ்., உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். இது தொடர்பாக, சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதுடன், உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE