ஓசூர்: ஓசூர் வனச்சரகத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால், கிராம மக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திலிருந்து இடம் பெயர்ந்த ஒற்றை ஆண் யானை, ஓசூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட, பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் கடந்த, 10 நாட்களுக்கும் மேலாக முகாமிட்டுள்ளது. நேற்று காலை முதல், பேரண்டப்பள்ளி வனப்பகுதியை ஒட்டிய ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையோரம் ஒற்றை யானை முகாமிட்டிருந்தது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் யானை தேசிய நெடுஞ்சாலைக்கு வரலாம் என்பதால், ஓசூர் வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். யானை சாலைக்கு வந்தால், பாதுகாப்பாக கடந்து செல்ல வாகனங்களை உடனடியாக நிறுத்தும் வகையில், சாலையிலேயே வனத்துறையினர் காத்திருந்தனர். மேலும், வனப்பகுதியை ஒட்டிய காவிரி நகர், கோபசந்திரம், கதிரேப்பள்ளி, ராமச்சந்திரம், பேரண்டப்பள்ளி, தும்மனப்பள்ளி சுற்று வட்டார கிராம மக்கள், வனப்பகுதிக்குள் விறகு சேகரிக்கவோ, ஆடு, மாடு மேய்க்கவோ செல்ல வேண்டாம் என, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். ஒற்றை யானையால், கிராம மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE