ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. தி.மு.க., ஆளும் கட்சி என்பதால், 45 வார்டு கவுன்சிலர் பதவிக்கும் கட்சியினர் பலர் சீட் கேட்கின்றனர். ஒவ்வொரு வார்டுக்கும் பலர் முட்டி மோதும் நிலை உள்ளது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., அவைத்தலைவர் யுவராஜ், தான் குடியிருக்கும், 36வது வார்டு, பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், 42வது வார்டில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அங்கு ஏற்கனவே கவுன்சிலர் சீட் கேட்டுள்ள, தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 42வது வார்டில், தி.மு.க.,விற்கு செல்வாக்கு உள்ளதாலும், ஆளுங்கட்சி என்பதாலும் அங்கு போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற்று, மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கிலும் அவர் உள்ளதாக, தி.மு.க., நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், அந்த வார்டில் தனக்கு வேண்டியவர்கள், 150 பேரை வாக்காளர் பட்டியலில் இணைக்க யுவராஜ் முயற்சி செய்துள்ளதாக, தி.மு.க.,வினர் புலம்புகின்றனர். மாவட்ட அவைத்தலைவர் என்பதால், எப்படியும் தனக்கு, 42வது வார்டு கிடைத்து விடும் என்ற எண்ணத்தில், பாரதிதாசன் நகர், குமரன் நகர், கிருஷ்ணப்பா நகர், செயின்ட் மேரிஸ் நகரில், ஓட்டுக்காக இப்போதே யுவராஜ் தரப்பில், பரிசு பொருளாக கடிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வேறு வார்டை சேர்ந்தவருக்கு சீட் வழங்கினால், தி.மு.க., ஓட்டுகள் சிதறி, அ.தி.மு.க.,விற்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும் என, தி.மு.க.,வினர் பேசி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE