சேந்தமங்கலம்: அரசு பள்ளி சுவர்களில், பட்டாம் பூச்சி குழுவினரின் ஓவிய சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அரியூர்நாடு பஞ்.,க்குட்பட்ட, கலிங்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமையாசிரியராக சந்திரமோகன், ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், பாண்டியன் நகர் துவக்கப்பள்ளியில் பணிபுரிந்து வரும், ஆசிரியர் சந்தோஷ்குமார் தலைமையில், ஆறு ஆசிரியர்கள் கொண்ட பட்டாம் பூச்சி குழுவினர் உள்ளனர். இவர்கள், கடந்த, 16ல், கலிங்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை சுவர்களில், தேசப்பற்று மிகுந்த ஓவியங்கள், இயற்கை காட்சிகளுடன் அமைந்த விலங்குகள், காய்கறிகள், பழங்கள், பறவைகள், எழுத்து வடிவங்கள் போன்ற ஓவியங்களை வரைந்துள்ளனர். இதனால், மாணவ, மாணவியர் இந்த ஓவியங்களை பார்த்து மகிழ்ச்சியுடன் பயின்று வருகின்றனர். இந்த ஓவியங்களை வரைந்த பட்டாம் பூச்சி குழுவினரை, அப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதுகுறித்து, பட்டாம் பூச்சி குழுவின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் கூறியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளாக இப்பணியை, அரசு பள்ளி ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து செய்து வருகிறோம். திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள, 100க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், பாடம் சார்ந்த ஓவியங்களை வரைந்துள்ளோம். இதற்காக எந்தவித கட்டணமும் வாங்குவதில்லை. விடுமுறை நாட்களை வீணாக்காமல், ஓவிய பணியை சேவையாக செய்து வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE