திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் தயார் நிலையில் உள்ளன. கவுன்சிலர் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய, அ.தி.மு.க.,வில் இன்று நேர்காணல் நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, ஆறு நகராட்சிகள்; 15 பேரூராட்சிகளுக்கு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., - அ.தி.மு.க., இடையே, திருப்பூர் மாநகராட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள், தலா ஒருமுறை, மேயர் பதவியை கைப்பற்றியுள்ளன. நகராட்சியாக இருந்த திருப்பூர், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது, 2008ல், தி.மு.க., நகராட்சி தலைவர், முதல் மேயராக பொறுப்பேற்றார்.திருப்பூர் மாநகராட்சி சந்தித்த முதல் தேர்தலில் (2011) அ.தி.மு.க., வெற்றி பெற்றது; மேயர், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.தி.மு.க., தேர்தல் பார்முலாவின்படி, மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்களில் இருந்து, மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இத்தேர்தலில், மேயர் தேர்தல் நேரடியாக நடக்குமா, மறைமுகமாக நடக்குமா என, அரசியல்வாதிகள், பந்தயம் கட்டி காத்திருக்கின்றனர்.மாநில தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் வெளியிட்ட வேட்பாளர் கையேட்டின் வாயிலாக, மேயர் மற்றும் சேர்மன் பதவிகளுக்கு, நேரடி தேர்தல் இல்லை என்பது, ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.மேயர் பதவி மட்டுமல்ல, துணை மேயர், நான்கு மண்டல தலைவர்கள்; கவுரவ பதவிகளான, ஏழு நிலைக்குழு தலைவர் பதவிகளும் உள்ளன. இதனால், 'சீட்' பங்கீட்டில் பிரச்னை இருக்காது என, தி.மு.க.,வினர் நம்புகின்றனர். தி.மு.க.,வில், காங்., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் இருப்பதால், கவுரவமான எண்ணிக்கையில் வார்டு பிரிப்பதில், மல்லுக்கட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இருப்பினும், தேர்தலை சந்திக்க, ஏற்கனவே தி.மு.க.,வினர் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். தேர்தல் பணியை வேகப்படுத்தும் நோக்கில், அ.தி.மு.க.,வில் விருப்பமனு கொடுத்தவர்களுக்கான, நேர்காணல் நடத்தப்பட உள்ளது.அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள் கூறுகையில், 'மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், வடக்கு தொகுதியில் உள்ள, 29 வார்டுகளுக்கு, நாளை (இன்று) காலை 9:30 மணிக்கும்; தெற்கு தொகுதியில் உள்ள, 21 வார்டுகளுக்கு, மாலை, 3:00 மணிக்கும் நேர்காணல் நடக்கிறது.திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள, 10 வார்டுகளுக்கு, பல்லடத்தில் நேர்காணல் நடக்கும். கூட்டணி 'சீட்' ஒதுக்கீட்டுக்கு பிறகு, வேட்பாளர் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE