திருப்பூர்:டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி மாணவர் தேர்வானார்.டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லுாரி மாணவர்களை தேர்வு செய்ய கடந்த அக்., மாதம் தேர்வு நடந்தது. அதில் உடல் வலிமை, உயரம், அணி வகுப்பு பயிற்சி, கலை நிகழ்ச்சி போன்ற தேர்வுகள் நடந்தன.பல்கலை அளவில் 5 மாணவிகள், 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு 2 மாணவன் பூபாலனும் (இளங்கலை இரண்டாம் ஆண்டு வரலாறு) தேர்வு செய்யப்பட்டார்.தெற்கு மண்டல அளவில் குடியரசு தின முந்தைய அணிவகுப்பு முகாம் பெங்களுரூவில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து, 34 மாணவிகள், 36 மாணவர்கள் பங்கேற்றனர்.இம்முகாமில் பாரதியார் பல்கலை அளவில் தேர்வான, 10 மாணவர்களும் கலந்து கொண்டனர்.இதில் புதுவை மற்றும் தமிழகத்தில் இருந்து 10 மாணவர்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வாயினர்.இதில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் (அலகு 2) மாணவன் பூபாலன் தேர்வாகி டெல்லி புறப்பட்டு சென்றார். இவர் மட்டுமே அரசு கல்லுாரியை சேர்ந்தவர். பாரதியார் பல்கலை சார்பாக, 3 மாணவர்கள் மட்டும் தேர்வாகி உள்ளனர்.இவரை பல்கலை துணைவேந்தர், ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணித்திட்ட (என்.எஸ்.எஸ்.,) மண்டல இயக்குனர், தமிழக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு- 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் வழியனுப்பி வைத்தனர்.கல்லுாரி முதல்வர் கூறுகையில், கல்லுாரி துவங்கி, 56 ஆண்டாகிறது. இதில் என்.எஸ்.எஸ்.,ல் இருந்து டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் தேர்வாவது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE