புதுடில்லி:'உத்தர பிரதேசத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும்' என, தனியார் அமைப்புகள் நடத்தியுள்ள முன் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா சட்டசபைகளுக்கு, பிப்., 10ல் துவங்கி மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 10ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதில், பஞ்சாபில் மட்டும் காங்., அரசு அமைந்துள்ளது. மற்ற நான்கு மாநிலங்களிலும் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேசத்தில் நடக்கவுள்ள தேர்தல், பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.
வரும் 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக உ.பி., சட்டசபை தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளிக்க உள்ளதால், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக இந்த சட்டசபை தேர்தல் முடிவு இருக்கும்.இங்கு, பிப்., 10-ம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தனித் தனியாக போட்டியிடுகின்றன.கொரோனா வைரஸ் பரவலால் பிரசார கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
அனைத்து கட்சிகளும் வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. மொத்தம் 403 தொகுதிகள் உள்ள உத்தர பிரதேசத்தில் 2017ம் ஆண்டில் நடந்த தேர்தலில், பா.ஜ., 312 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. கடந்த சில வாரங்களாக சமாஜ்வாதியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
பிரியங்கா
காங்.,கில் அதன் பொதுச் செயலர் பிரியங்கா மட்டுமே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி வெறும் அறிக்கைகள் மட்டுமே வெளியிட்டு வருகிறார்.இந்தத் தேர்தல், பா.ஜ., மற்றும் சமாஜ்வாதிக்கு இடையேயான நேரடி மோதலாகவே இருக்கும் என பல கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.
2-வது இடம்
உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக, சில தனியார் அமைப்புகள் முன் கணிப்பை சமீபத்தில் நடத்தியுள்ளன.இந்த அமைப்புகள் நடத்திய கணிப்புகளின்படி, 235 - 249 இடங்களில் வென்று பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. சமாஜ்வாதி 137 - 147 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும்.பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7 - 13 இடங்களும், காங்.,குக்கு 3 - 7 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனவும் முன் கணிப்புகள் கூறுகின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE