வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:இந்திய பொருளாதாரம் சில அம்சங்களில் பிரகாசமாகவும், பலவற்றில் கறை படிந்தும் காணப்படுவதாக, ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்து உள்ளார். செலவினங்களை திட்டமிட்டு மேற்கொள்ளும்படியும் அரசுக்கு அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
7,500 கோடி ரூபாய்
அமெரிக்காவின் சிகாகோ பூத் வர்த்தக பல்கலை பேராசிரியரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருமான ரகுராம் ராஜன் கூறியதாவது:இந்திய பொருளாதாரத்தில் மிகப் பிரகாசமான புள்ளிகளாக வலிமையான கார்ப்பரேட் நிறுவனங்கள் காணப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் துறையின் வர்த்தகமும் மிகச் சிறப்பாக உள்ளது.
ஏராளமான 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் 7,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு உயர்ந்து 'யூனிகார்ன்'
அந்தஸ்தை பெற்றுள்ளதும், நிதித் துறையின் சில பிரிவுகள் வலிமையாக உள்ளதும், பிரகாசமான பொருளாதாரத்திற்கு அடித்தளமிட்டுள்ளன. அதே நேரத்தில் வேலையில்லா திண்டாட்டம், நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பது ஆகியவை, நாட்டின் பொருளாதாரத்தின் கறுமையான கறைகளாக உள்ளன.
எச்சரிக்கை
கடன் வளர்ச்சி குறைந்திருப்பது, கொரோனாவால் மாணவர்களின் கல்வி பாதிப்பு ஆகியவையும் கவலைக்குரியவையாக உள்ளன. எனவே, மத்திய பட்ஜெட்டில் ஐந்து அல்லது 10 ஆண்டு கால தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும். மத்திய அரசு எச்சரிக்கையுடன் செலவினங்களை மேற்கொள்ள வேண்டும். நீண்ட காலத்திற்கு நிதிப் பற்றாக்குறை நீடிக்க அனுமதிக்கக் கூடாது. இதற்கு தேவையான நிதியாதாரத்தை பெற, அரசு நிறுவன பங்குகளையும், அரசின் உபரி நிலங்களையும் விற்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE