தேவதானப்பட்டி--தேவதானப்பட்டி அருகே யானை தந்தத்தை விற்பனை செய்ய வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் கும்பல் தாக்கியதில் வனக்காவலர் காயமடைந்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் 30. அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் பாலமுருகன் 35, பிரகாஷ் 29, பாக்யராஜ் 30, முத்தையா 57, வத்தலகுண்டு அப்துல்லா 34. உசிலம்பட்டியை சேர்ந்த சிவகுமார் 42, சின்னராஜ் 29, தேனியைச் சேர்ந்த சரத்குமார் 30, விஜயகுமார் 60, ஆகிய பத்து பேர் இரண்டு யானை தந்தங்களை (920 கிராம் 970 கிராம் எடை) வைத்துக்கொண்டு விற்பனை செய்ய தேனி திண்டுக்கல் மாவட்டத்தில் 10நாட்களாக சிலரிடம் விலைபேசியுள்ளனர்
ஓய்வு அலுவலரிடம் விற்க முயற்சி
கடத்தல் கும்பலில் ஒருவர் கொடைக்கானல் வனக்கோட்டததை சேர்ந்த ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி ஒருவரிடம் அவர் யார் என்ற விவரம் தெரியாமல் அலைபேசியில் யானைத் தந்தம் விலை விவரம் கேட்டுள்ளார். சம்பந்தப்பட்ட அலுவலர் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டிற்கு கொண்டு வாருங்கள் விலையை தீர்மானம் செய்யலாம் என்றார். நேற்று காலை 5:45 மணிக்கு வேனில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் காத்திருந்தனர். இதில் சுரேஷ் இந்தப் பகுதியில் தேவதானப்பட்டி ரேஞ்சர் அலுவலகம் உள்ளது. நாம் மாட்டிக்கொள்வோம் என சந்தேகித்துள்ளார். இவர் சுதாரிப்பதற்குள் ரேஞ்சர் டேவிட் ராஜா மற்றும் பெரும்பள்ளத்தை சேர்ந்த 25 பேர் கொண்ட வனத்துறையினர் 4 குழுக்களாக பிரிந்து கடத்தல் கும்பலை சுற்றிவளைத்தனர்.
இதில் வனக்காப்பாளர் கருப்பையாவை சுரேஷ் தாக்கி தப்பினார். கருப்பையா மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 9 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரண்டு யானை தந்தங்களும் தேனி மாவட்டத்தில் ஜமீன்தார் வீட்டிலிருந்து திருடப்பட்டதா அல்லது யானையைக் கொன்று திருடப்பட்டதா என வனத்துறையினர் விசாரிக்கின்றனர். டேவிட் ராஜா கூறுகையில்: இரண்டும் ஒரே யானையின் தந்தங்கள் ஆகும். முக்கிய குற்றவாளியான சுரேஷை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளோம். விரைவில் பிடி படுவார் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE