வத்திராயிருப்பு--வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் முட்புதரில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது. மேலும் 6 குண்டுகளை போலீசார் கைப்பற்றினர்
.ஜன. 18ல் புதுப்பட்டி அர்ச்சுனாபுரம் ஓடை மூலக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்தின் போது சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய கிறிஸ்தியான் பேட்டையைச் சேர்ந்த மூவரிடம் 9 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறை போலீசார் கைப்பற்றினர். இதில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நால்வரை போலீசார் தேடுகின்றனர்.வத்திராயிருப்பு பகுதியில் பல்வேறு இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் நேற்று முன்தினம் மதுரை வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் சிறப்பு பிரிவு போலீசாரால் அழிக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோட்டையூர் மேற்கு காலனியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் விவசாயி. இவர் நேற்று மதியம் விவசாய வேலை முடித்து தனது வீட்டின் அருகே உள்ள முட்புதர் காலியிடத்தில் தனது டிராக்டரை நிறுத்தியுள்ளார். அப்போது டயரின் அடிப்பகுதியில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே இடத்தில் மேலும் 6 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
டி.எஸ்.பி. சபரிநாதன் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.வெடிக்காத வெடிகுண்டுகளை சுற்றி கயிறு கட்டி மணல் மூட்டைகளை அடுக்கி மக்கள் யாரும் நுழைந்து விடாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பாக வைத்தனர். எஸ்.பி. மனோகர் பார்வையிட்டார்.முதல் கட்ட விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் வேறு எங்காவது வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து போலீசார் தேடுகின்றனர். தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE