வி.குணசேகரன், கடையம்,தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., வசம் ஆட்சி சென்றால், வீதிதோறும் கம்பம் நிறுவி, அதில் கொடி ஏற்றப்படும்; முச்சந்தி தோறும் சிலை நிறுவி, அதன் கீழ் கல்வெட்டு வைக்கப்படும். காலியாக ஒரு இடத்தை பார்த்தால், உடனே அதில் ஒரு மணிமண்டபம் அமைத்து, தங்கள் அருமை பெருமைகளை பதித்துக் கொள்ளும். இரண்டு கோடி ரூபாயில் அமைக்கும் பூங்காக்களுக்கு, 200 கோடி ரூபாயில் திட்டம் தீட்டப்படும்.
தற்போதும் இவை, அடிபிறழாமல் நடந்து வருகிறது.தமிழகம் முழுதும் சிலைகள் நிறுவி முடித்தாயிற்று. இனி சிலை நிறுவ, இடமே தோதாக இல்லை. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? கழகத்தின் பெருமை, கடல் கடந்தும் பரவ வேண்டாமா?இதோ தீட்டி விட்டனர், ஒரு திட்டத்தை! 'முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குவிக்கிற்கு, இங்கிலாந்தில் உள்ள அவரது சொந்த ஊரான கேம்பர்லி நகர மைய பூங்காவில், தமிழக அரசு சார்பில் புதிய சிலை அமைக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த பென்னி குவிக்கின் சிலை அமைக்க, லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சி எடுக்கப்பட்டு, இங்கிலாந்து சட்டப்படி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் ஒப்புதலும் பெற்று விட்டனராம். என்னே சுறுசுறுப்பு! இந்த சுறுசுறுப்பை, மக்கள் நல திட்டங்கள் எதிலும் காண இயலவில்லையே!அது சரி, இந்த பென்னி குவிக்கிற்கு முழு உருவச் சிலையா அல்லது மார்பளவு சிலையா என்பதை முடிவு செய்து விட்டனரா அல்லது அதற்கும் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைக்கப்படுமா தெரியவில்லை.
மேலும், இந்த சிலை எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதையும் தெளிவாக சொல்லவில்லையே.அந்த நிதியை, வழக்கம் போல உலக வங்கியிடம் வாங்குவரா அல்லது லண்டன் வாழ் தமிழர்களிடம் வசூலிப்பரா என்பதும் தெரியவில்லை.
ஆக மொத்தத்தில், இங்கிலாந்தில் பென்னி குவிக்கின் சிலை நிறுவ இருப்பதும் உறுதி; அதை, முதல்வர் ஸ்டாலின் தன் புடை சூழ சென்று திறந்து வைக்க இருப்பதும் உறுதி.
அனைத்திற்கும் காரணம் யார்?
ஆனந்த் வெங்கட், சென்னையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சி மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. ஓராண்டு கூட நிறைவு பெறாத ஒரு ஆட்சி, இவ்வளவு சீக்கிரம்மக்களின் வெறுப்பை சம்பாதித்தது, ஒரு வெறுக்கத்தக்க சாதனையே.
அரசியல் ஆலோசகர்பிரசாந்த் கிஷோரின் விளம்பர யுக்தி மற்றும்பொய் வாக்குறுதிகள் தான், தி.மு.க.,வை ஆட்சி பொறுப்பில் அமர்த்தியது.ஏமாற்றுவது குற்றம்தான்; ஆனால், ஏமாறுவது? அதுவும், 50 ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாறுவது ஏற்கத்தக்க செயலா?மக்களுக்கு பொறுப்பே கிடையாதா?
அ.தி.மு.க.,வின் மாபெரும் சாதனை என்று எதையாவது சொல்ல வேண்டுமென்றால், அது தி.மு.க.,வின் அட்டூழியத்தை சில ஆண்டுகளுக்கு தடுத்து நிறுத்தியதாகத் தான் இருக்கும். தி.மு.க., ஆட்சியில் எந்த திட்டத்தை எடுத்தாலும், அதில் ஊழல் கறை தென்படும். கோவில்களை சகட்டுமேனிக்கு இடிப்பதும், ஹிந்துக்களை மதமாற்றம் செய்யும் முயற்சியும் நடக்கும்.தொழில் நிறுவனங்களிடம் கட்டாய வசூல், நில ஆக்கிரமிப்பு, திரைத்துறையை முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது, ஊடகங்களின் குரல்வளை நெரிப்பு என்று தி.மு.க., அரசின், 'சாதனை' பட்டியல் நீளும்.
ரேஷன் கடையில் பொருள் வாங்குவோர் யாரும் செல்வந்தர் இல்லை. அங்கு தரப்படும் பொருட்கள் மீது குறை சொல்வோரை சிறைக்கு அனுப்பிய முதல் ஆட்சியும், தி.மு.க., அரசு தான்.தேர்தலுக்கு முன், 'சர்வாதிகாரியாக மாறுவேன்' என, ஸ்டாலின் சொன்னது, தி.மு.க.,வினரை அடக்கி வைக்கத் தான் என்று எண்ணினோம்; ஆனால், அது தமிழக மக்களுக்கு என்பது தெரியாமல் போய் விட்டது.தி.மு.க., வென்றால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெடும், நிதி நிலை குட்டிச்சுவராகும் என்று தெரிந்தும், அக்கட்சியை வெல்ல வைத்தது யார்? இந்த மக்கள் தானே!
தி.மு.க.,வின் பிரபலத்திற்கு யார் காரணம்?
வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: 'முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி படங்கள் மூலமாகத் தான், எம்.ஜி.ஆர்., பிரபலமானார்' என்று திருவாய் மலர்ந்துள்ளார், தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி.ஆனால், எம்.ஜி.ஆரால் தான், தி.மு.க.,வே பிரபலமடைந்தது என்பது உலகம் அறிந்த உண்மை.
எம்.ஜி.ஆரின் செல்வாக்கும், அவரது படங்களும் தான், பட்டி தொட்டி எங்கும் தி.மு.க., பிரபலமடைய காரணம் என்பது, பாமரனுக்கும் தெரியும்; ஆர்.எஸ்.பாரதிக்கு மட்டும் தெரியாதா என்ன?எம்.ஜி.ஆர்., படத்தில் இடம்பெறும் பாடல், வசனம் மற்றும் உடையில் கூட, தி.மு.க., குறியீடு இருக்கும். தி.மு.க.,வின் வளர்ச்சிக்காக, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், உதயசூரியனின் பார்வையிலே...' என பல பாடல்களை தன் படங்களில் இடம் பெறச் செய்தவர், எம்.ஜி.ஆர்., என்பதை, முதல்வர் ஸ்டாலின் கூட மறுக்க மாட்டார்.
அது மட்டுமல்லாது, தி.மு.க.,வின் தேர்தல் வெற்றிக்கு எல்லாம் எம்.ஜி.ஆரே முக்கிய காரணமாக இருந்ததை, முன்னாள் முதல்வர் அண்ணாதுரையே வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதனால் தான் எம்.ஜி.ஆரை, 'இதயக்கனி' என்று பாராட்டினார் அண்ணாதுரை. நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருந்த எம்.ஜி.ஆரின் புகைப்படத்தை காட்டி தானே, தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆருக்காகவே, தமிழக மக்கள் தி.மு.க.,விற்கு ஓட்டளித்தனர். எம்.ஜி.ஆர்., இல்லையென்றால் அண்ணாதுரையின் மறைவிற்கு பின், தி.மு.க.,வும் இருந்திருக்காது; கருணாநிதியும் முதல்வராகி இருக்க முடியாது.
எம்.ஜி.ஆரின் ஆதரவால் தான்,கருணாநிதி முதல்வர் ஆனார் என்பது, ஆர்.எஸ்.பாரதிக்கு தெரியுமா?வரலாறு படித்து தெளிந்த பின், ஆர்.எஸ்.பாரதி பேச வேண்டும். யாரால், யார் பிரபலமாகியது என்பதை வரலாறு கூறும்; அதை மூடி மறைக்க முடியாது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE