வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை-''இன்றைய இந்தியாவின் அடையாள சின்னமாக திகழ்பவர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,'' என, தேசிய சிந்தனை கழகத்தின் முப்பெரும் விழா மாநில கமிட்டி சார்பில், இணையவழியில் நடந்த நேதாஜி 125வது ஆண்டு பிறந்த நாள் விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசினார்.
ஆதலையூர் சூரியகுமாரின் 'தேசம் நேசித்த தலைவன்' என்ற நுாலை வெளியிட்டு, அவர் பேசியதாவது:நான், ஒன்பதாம் வகுப்பு படித்த போது, ராஜாஜி வாழ்க்கை வரலாற்று புத்தகம் படித்தேன். அந்த புத்தக நாயகன் ராஜாஜி, வழக்கறிஞராக இருந்ததால் நானும் வழக்கறிஞரானேன். புத்தகம் எந்தளவு தாக்கம் ஏற்படுத்தும் என்பதற்கு இது உதாரணம்.'தேசம் நேசித்த தலைவன்' நுால் மாணவர்களை சென்றடைய வேண்டும்.
இன்றைய இந்தியாவின் அடையாள சின்னம் நேதாஜி. அவர் அளவிற்கு தியாகம் செய்யாமல், சிறிது தியாகம் செய்தாலே வாழ்வில் சாதிக்கலாம்.நேதாஜி இறப்பு நிஜமா, இல்லையா என கூறும் ஒரு புத்தகம் படித்த போது அவரின் ஆன்மிக ஆர்வம் தெரிந்தது. முத்துராமலிங்கத் தேவர் போல் 'தேசியமும் தெய்வீகமும்' இரு கண்களாக நேதாஜி பிரதிபலித்தார்.இவ்வாறு அவர் பேசினார்.
திருச்சி இந்திராகாந்தி கல்லுாரி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன், பேராசிரியை புவனேஸ்வரி, வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர் மற்றும் கமிட்டி தலைவர் ஜி.வி.செல்வம்.கட்டுரையாளர் கோதை ஜோதிலட்சுமி, சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்றனர்.
'தினமலர்' இணை இயக்குனரும், கமிட்டி செயலருமான இரா.லட்சுமிபதி நன்றி கூறினார்.சேலம் ஏ.வி.எஸ்., சக்தி கைலாஷ் கல்லுாரி மாணவியரின் பரதநாட்டியம், இந்திராகாந்தி கல்லுாரி, கன்னியாகுமரி சி.ஏ.பி.இ., கல்வி குழும மாணவியரின் நாடகம் நடந்தது. பூவரசன், கோகுல், கவுரி ஒருங்கிணைத்தனர்.தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடான 'தேசம் நேசித்த தலைவன்' புத்தகம் வேண்டுவோர் 1800 425 7700க்கு தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE