த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்பேட்டி: பஞ்சு, நுால் விலை உயர்வால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம் மாவட்டங்களில், பல லட்சம் ஜவுளி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். எனவே, நுால் விலை உயர்வை கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நுால் இறக்குமதிக்கான வரியையும் நீக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், மதுபான விலை உயர்வு என்றால் கட்சிகள் கொடி பிடிக்கும். அப்பாவி ஜவுளி தொழிலாளர், நெசவாளர்களை கண்டுகொள்வார் யாருமில்லையே!
பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம்பேட்டி: தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி, விவசாயிக்கு ஏக்கருக்கு, 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, 'நீட்' தேர்வு ரத்து, மதுக்கடைகள் மூடப்படும் என மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்தது. ஆட்சிக்கு வந்து, எட்டு மாதங்களாகியும் நிறைவேற்ற முடியவில்லை.
பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறாரே... அப்போது அது பொய்யா இப்ராகிம்?
இந்திய கம்யூ., மாநில தலைவர் முத்தரசன் பேட்டி: மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், அக்கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் கவர்னர்கள், ஒற்றர்களாக பயன்படுத்தப் படுகின்றனர். இது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.எந்த கவர்னராவது உங்களிடம்இப்படி சொன்னாரா... அல்லது எந்த மாநிலத்திலாவது, இந்திய கம்யூனிஸ்ட்காரர்கள் கவர்னர்களாக இருந்தனரா; சும்மா அவிழ்த்து விடாதீர்கள் சார்!
தமிழக காங்., செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன்அறிக்கை: 1988ல் இந்தியா வந்த போது, 'என்னால் முடியும்' என்றேன். பிறகு, 'கடவுளே, உன் துணையோடு என்னால் முடியும்' என்றேன். இப்போது, 'கடவுளே உன்னால் மட்டும் தான், அரசியலில் எனக்கு பதவி கிடைத்து, நாட்டுமக்களுக்கு மேலும் உதவ முடியும்' என்று புரிந்து கொள்கிறேன்; அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
நீங்கள் இருக்க வேண்டிய கட்சி, காங்கிரஸ் அல்ல; பா.ஜ., போல தெரிகிறதே!
ஹைதராபாதின் ஏ.ஐ.எம். இ.ஐ.எம்., என்ற முஸ்லிம் கட்சியின் எம்.பி., ஒவைசி: உ.பி.,யில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், இரண்டு முதல்வர்கள் இருப்பர். அதில் ஒருவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவராகவும், இன்னொருவர் பட்டியல் இனத்தவராகவும் இருப்பார். இஸ்லாமியர் உட்பட மூன்று பேர், துணை முதல்வர்களாகவும் இருப்பர்.
உ.பி.,யில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே உங்கள் கட்சி ஆட்சிக்கு வர முடியாது என நன்கு தெரிந்து கொண்டு, 'அள்ளி' விடுகிறீர்களா?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:பொங்கல் பரிசுத் தொகுப்பில் நடந்த முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் கூறியிருப்பது, வெறும் கண்துடைப்பு நாடகம். இதெல்லாம் மக்களை ஏமாற்ற செய்யும் வேலை. 'பாம்பின் கால் பாம்பறியும்' என்பரே... அது, இது தானா என்ற கேள்வி எழுகிறதே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE