பொள்ளாச்சி:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில், பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட ஓய்வறை, பராமரிப்பு இல்லாமல் பூட்டியே வைத்திருப்பது, மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.கடந்த, 2015ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, காணொலி காட்சி வாயிலாக பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட், கோவை மற்றும் உடுமலை பஸ்கள் நிற்கும் பகுதியில், தாய்மார்கள் பாலுாட்டும் அறை மற்றும் ஆண்கள் ஓய்வறைகளை திறந்து வைத்தார்.நீண்ட துாரம் பஸ்களில் பயணிப்போருக்கும், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கும் இந்த திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது. ஆனால், திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே, இந்த அறைகளுக்கு நகராட்சி நிர்வாகம் பூட்டுப் போட்டது.பல லட்சம் ரூபாய் செலவழித்து செயல்படுத்திய திட்டம், பயனற்று போனது. அந்த அறைகளை திறந்து வைத்தால், சமூக விரோதிகள் தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்; அதை தவிர்க்கவே பூட்டி வைத்துள்ளோம், என, அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்.24 மணி நேரமும், போலீஸ் கண்காணிப்புள்ள பஸ் ஸ்டாண்டில், ஆள் நடமாட்டமுள்ள பகுதியில் எப்படி தவறுகள் நடக்கும்? அப்படி நடந்தால், அதற்கு போலீசாரின் கவனக்குறைவே காரணமாகும்.நகராட்சி நிர்வாகம் இந்த அறைகளை பூட்டி வைத்து, அரசின் நல்ல திட்டத்தை முடக்கி, பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதியை பறித்துள்ளது, என, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE