மதுரை: ஆணோ பெண்ணோ பிறப்பதானாலேயே சாதனை படைப்பதில்லை. அவர்களை சரிசமமாக வளர்ப்பதானாலேயே சாதனை படைக்கின்றனர். அடுத்தடுத்து பெண் பிறந்தால் அச்சமின்றி கொலை, அதை மீறி வளரும்போது வீட்டுக்குள் கட்டுப்பாடு, சமுதாயத்தில் பாலின பாகுபாடு, திருமணத்திற்கு பின் சிறு வட்டத்திற்குள் வாழ சொல்லும் நிர்பந்தம்... இதுபோன்ற தடைகள் எத்தனை நூற்றாண்டுகளுக்கு தான் பின்பற்றப்படுமோ... இன்று (ஜன.24) தேசிய பெண் குழந்தைகள் தினம். ஆண், பெண் பேதமற்ற சமுதாயத்தில் வளர்ந்த பெண்கள்... நாங்கள் பெண் என்பதாலேயே பெருமிதம் கொள்கிறோம் என்றனர்.
பெண் தொழிலாளர்களால் மகிழ்ச்சி
சுபா, தொழில்முனைவோர், கோமதிபுரம்: குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் வரை சமையல், வீட்டு வேலை என்ற வட்டத்திற்குள் வாழ்ந்தேன். பள்ளி செல்ல துவங்கியதும் என்னை பற்றிய மதிப்பீடு தாழ்ந்து போனது. என்னை நானே முன்னேற்ற நினைத்தேன். கணவர் பிரபாகர் முயற்சியால் தையல் தொழில் துவங்கினேன். ஆண்கள் சட்டை தைக்க ஆண் டெய்லர்கள் செட் ஆகவில்லை. பத்து பெண்களை நியமித்தேன். இப்போது 150 பெண்கள் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். மிக நேர்த்தியாக வேலைகளை செய்கின்றனர். சின்ன சின்ன விஷயங்களில் தலையிடக்கூடாது என்பது கணவர் கற்று கொடுத்த பாடம். இப்போது பெண்களுக்காக வாழ்க்கைத்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கிறேன். என்னை அடிக்கடி புதுப்பித்து கொள்வதால் பெண் என்பதை பெருமிதமாக உணர்கிறேன்.
கிச்சன் செட் வாங்கி தரவில்லை
சவ்ரினி பானர்ஜி, கல்லுாரி உதவி பேராசிரியை, கே.புதூர்: ஆணோ,பெண்ணோ குழந்தையில் பேதம் வேண்டாம். என் பெண் குழந்தைக்கு விளையாட பார்பி பொம்மை, கிச்சன் செட் வாங்கி தரவில்லை. அவள் நன்றாக ஓடுவாள். பேட், பந்து வாங்கி தந்து விளையாட வைக்கிறேன். பெண்ணுக்கு அடுப்படி தான் என்ற மாயையில் இருந்து பெண்களே விடுபட வேண்டும். ஆண் குழந்தை தான் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். மனிதத்தன்மையுடன் வளர்ப்பது தான் முக்கியம். பெண் குழந்தையா... பாகுபாடின்றி கொண்டாடுங்கள். சமுதாயமும் கைகொடுக்கும்.
மகளாக இருப்பதில் பெருமை
சாரன், கல்லுாரி மாணவி, எல்லீஸ் நகர்: எங்களது கூட்டுக்குடும்பம். அக்கா, நான், தம்பி இருந்தாலும் ஆண் என்பதற்காக தம்பியை மட்டுமே தனித்துவமாக வளர்க்கவில்லை பெற்றோர். மூவரும் எல்லா வீட்டு வேலையும் கற்று கொண்டோம். கல்வி, கலை, கலாசாரம் எல்லாவற்றிலும் சம உரிமை கொடுத்து யாரையும் சார்ந்து வாழாமல் சுதந்திரமாக வாழ வழி தந்தனர். எப்படி இருக்கக்கூடாது என்பதை விளைவுகள் மூலம் புரிய வைத்தனர். பெண் பிள்ளைகளை பொத்தி பொத்தி வளர்க்காமல் சமுதாயத்தை எதிர்நோக்கும் தைரியத்தை உருவாக்கி புதிய பாதையில் நடக்க வைக்கின்றனர். வீடு சரியாக இருந்தால் சமுதாயம் சரியாக இருக்கும் என்பதற்கு பெற்றோர் உதாரணம்.
தனியாக தைரியமாக செல்கிறேன்
பவித்ரா, வாலிபால் வீரர், ஜெய்ஹிந்துபுரம்: கஷ்டப்படும் குடும்பம் தான். அம்மா பாண்டியம்மாள் தந்த உற்சாகத்தில் ஏழாவது படிக்கும் போதிருந்து வாலிபால் விளையாடுகிறேன். எட்டாவது முதல் ஈரோடு விளையாட்டு விடுதியில் தங்கினேன். விடுமுறைக்கு நானே தனியாக மதுரை வந்து விடுவேன். பத்தாம் வகுப்பு படிக்கும் போது சிறந்த வீராங்கனைக்காக அர்ஜூனா விருது கிடைத்தது. அடுத்து நான்கு முறை சிறந்த வீராங்கனை விருது பெற்றேன். ஆம்பளப்பய மாதிரி சுத்துறானு சொந்தக்காரங்க சொல்வாங்க. அதைப்பத்தி கவலைப்படாம சாதிக்கிறேனா அம்மா தான் காரணம். இப்போ கல்லூரி முதலாண்டு படிக்கிறேன். ராணுவ வீராங்கனையா ஆவது லட்சியம். ஜெயிச்ச பின்னால் பெண் பிள்ளைனு கொண்டாடுவாங்க.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE