பொள்ளாச்சி, உடுமலையில், மூன்றாவது வாரமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், நகர ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையில், எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கையும் அமல்படுத்த அரசு உத்தரவிட்டது.அதன்படி, பொள்ளாச்சி சத்திரம் வீதி, கோட்டூர் ரோடு, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் நகை, துணி, மளிகை கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.போக்குவரத்து நிறைந்த பஸ் ஸ்டாண்ட், கோவை ரோடு, நியூஸ்கீம் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் வாகனங்கள் இயக்கம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. போலீசார் கூறியதாவது:ஊரடங்கில் விதிமுறை மீறல்களை கட்டுப்படுத்த, டி.எஸ்.பி., தமிழ்மணி தலைமையில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.பொள்ளாச்சி சரகத்தில் இதுவரை முகக்கவசம் அணியாமல் சுற்றிய, 1,271 பேருக்கு, 2லட்சத்து, 90 ஆயிரத்து, 800 ரூபாயும்; சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்தவர்கள் என, 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.முழு ஊரடங்கில் தேவையில்லாமல் விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித்திரிந்த, 514 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இரண்டு லட்சத்து, 57 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மொத்தம், 1,875 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஐந்து லட்சத்து, 92 ஆயிரத்து, 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.கண்காணிப்புபொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் தாணுமூர்த்தி, நகர்நல அலுவலர் ராம்குமார், போலீசார் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர், ஊரடங்கில் வாகன போக்குவரத்து உள்ளதா; தேவையில்லாமல் வெளியே சுற்றுகின்றனரா என கண்காணிப்பு செய்தனர்.உடுமலைஊரடங்கையொட்டி, உடுமலை நகரப்பகுதியில், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிகளை மீறிய, வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு, ஞாயிற்றுக்கிழமைகளில், ஊரடங்கு அறிவித்துள்ளது. இதையொட்டி, நேற்று உடுமலை நகரப்பகுதியில், குறிப்பிட்ட இடைவெளியில், போலீசார் கண்காணிப்பு பணியில், ஈடுபட்டனர்.அப்போது, அவசியமின்றி வாகனங்களில் வலம் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். அனைத்துக்கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் வழங்கப்பட்டது.பஸ்கள் இயக்கப்படாததால் பஸ் ஸ்டாண்ட் மற்றும் இதர முக்கிய ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டன.திருமூர்த்திமலை, அமராவதி உட்பட சுற்றுலா தலங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. கிராமப்புறங்களில், விவசாய சாகுபடி பணிகள் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றது.கிணத்துக்கடவுகிணத்துக்கடவு பேரூராட்சியில், மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. பெட்ரோல்பங்க், மருந்துக்கடைகள், பால் விற்பனையகங்கள் தவிர மற்றும் விற்பனை நிறுவனங்கள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டன.போலீசார் செக்போஸ்ட், பழைய பஸ் ஸ்டாப், புது பஸ் ஸ்டாப் பகுதிகளில் வாகன சோதனை நடத்தி, அபராதம் விதித்ததால், அத்தியாவசிய தேவைக்கு வெளியே வருபவர்கள் மட்டுமே தீவிர விசாரணைக்குப்பின் அனுமதிக்கப்பட்டனர்.தவிர ரோட்டில் நடந்து சென்றவர்கள் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டு, துரத்தப்பட்டனர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, உடனடியாக வசூலிக்கப்பட்டன.நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னேரிபாளையம், நெகமம், காளியப்பம்பாளையம், ரங்கேகவுண்டன்புதுார், எம்.ஜி.ஆர்., நகரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டன.பொள்ளாச்சி - பல்லடம்ரோடு, தாராபுரம் ரோடு, கோவில்பாளையம் ரோட்டில் போலீசார் வாகனச்சோதனை மேற்கொண்டு, அத்துமீறியவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.வால்பாறைகோவை மாவட்டம் வால்பாறையில் முழு ஊரடங்கையொட்டி சந்தை நாளான நேற்று வால்பாறை நகரில், அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. ஆட்டோ, வேன், லாரி உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை.இதனால் வால்பாறை நகரில் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலாஸ்தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், நல்லமுடி காட்சி முனை, தலநார் வியூ பாயிண்ட், சோலையாறு அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.- நிருபர் குழு -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE