வெலிங்டன்-கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், 41, தன் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன்படி பொது நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பொது போக்குவரத்து மற்றும் கடைகளில் மக்கள் முக கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் இறுதிவரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் வெளியிட்டார்.இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் காரணமாக பிரதமர் ஜெசிந்தா, தன் திருமணத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு முதல் கிளார்க் கேபோர்ட், 45, என்பவருடன் பிரதமர் ஜெசிந்தா ஒன்றாக வாழ்ந்து வருகிறார்.
கிளார்க்கை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வரும் ஜெசிந்தா, 2018ல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.இவர்கள் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். தேதி குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளால் தன் திருமணத்தை ஜெசிந்தா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE