புதுடில்லி: கோவா சட்டசபை தேர்தலுக்காக டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொள்ளும் ஆம்ஆத்மி கட்சி, டில்லியில் தங்களது ஆட்சியில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் குறித்த வீடியோக்களை பகிர்ந்து வைரலாக்கும் 50 நபர்களுடன் ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு பிறகு இரவு உணவு சாப்பிடுவார் என்கிற பிரசாரத்தை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.
கோவாவில் வரும் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்கு பா.ஜ., காங்கிரஸ், ஆம்ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கான டிஜிட்டல் பிரசாரத்தை ஆம்ஆத்மி கட்சி இன்று (ஜன.,24) முதல் துவக்கியது.
இதுகுறித்து டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லியில் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குவது போன்ற பல நல்ல பணிகளை தனது அரசு செய்துள்ளது.

டில்லியில் இயங்கும் மொஹல்லா கிளினிக்குகளைப் பார்க்க ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அமெரிக்க அதிபரின் மனைவி இங்குள்ள பள்ளிகளுக்குச் சென்றார். டில்லியில் தற்போது 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது. டில்லி மக்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததால் இவை அனைத்தும் சாத்தியமானது. இதுபோலவே மற்ற மாநில மக்களும் வாய்ப்பு தர வேண்டும். இதுபோன்ற காணொலிகளை பகிர்ந்து, கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும். இதுபோன்று வீடியோக்களை வைரலாக்கும் 50 நபர்களுடன் தேர்தலுக்குப் பிறகு, நான் இரவு உணவு சாப்பிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE