சேலம்: சேலம் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், 699 பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதில், சேலம் மாநகராட்சியில், 60; நகராட்சிகளில் ஆத்தூர், 33, நரசிங்கபுரம், 18, மேட்டூர், இடைப்பாடி தலா, 30, இடங்கணசாலை, தாரமங்கலம் தலா, 27 என, 165; பேரூராட்சி, 31ல், வனவாசி, 12, மேச்சேரி, பி.என்.பட்டி, சங்ககிரி, தம்மம்பட்டி தலா, 18, இதர, 26 பேரூராட்சியில் தலா, 15 என, 474 என, இத்துடன் சேர்த்து, 699 வார்டு உறுப்பினர் பதவிக்கு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. கடந்த, 5ல், 2022 இறுதி வாக்காளர் பட்டியல், சட்டசபையின், 11 தொகுதிகள் வாரியாக வெளியிடப்பட்டது. அதில், 49 ஆயிரத்து, 174 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு, 17 ஆயிரத்து, 953 பேர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் முறையே, சேர்த்தல், நீக்கல் பணி, ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. விரைவில் வார்டு வாரியாக, துணை வாக்காளர் பட்டியல் - 1 வெளியிடுவதற்கான பணி நடக்கிறது. இறுதி வாக்காளர் பட்டியலுக்கு, டிச., 31 வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மனுக்கள் பெறப்பட்டன. அதன்பிறகும், மனுக்கள் தொடர்ந்து பெறப்படுகிறது. அவை, நகர்புற தேர்தல் வேட்புமனு தாக்கல் கடைசிநாள் வரை பெறப்பட்டு, பின், 'மேனுவல்' ஆக துணை வாக்காளர் - 2 வெளியிடப்பட்டு ஓட்டுப்பதிவு நடக்கும். இந்நிலையில், தேர்தலுக்கு சில படிவங்கள் மட்டும், தேர்தல் நடத்தும் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.