சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு: கட்கரிக்கு ஸ்டாலின் கடிதம்| Dinamalar

சாலை திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு: கட்கரிக்கு ஸ்டாலின் கடிதம்

Added : ஜன 24, 2022 | கருத்துகள் (6) | |
சென்னை : 'தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான, அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்த, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.'தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு
DMK, MK Stalin, Nitin Gadkari

சென்னை : 'தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்கள் தொடர்பான, அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்த, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்' என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

'தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை' என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.அதிக முக்கியத்துவம் இது தொடர்பாக, கட்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, தாங்கள் தெரிவித்த கருத்துக்களை, ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். பல்வேறு பிரச்னைகளை நீங்கள் எடுத்துரைத்து, அவற்றை சமாளிப்பதில், மாநில அரசின் ஒத்துழைப்பை கோரியிருந்தீர்கள். முன்பு ஒரு சந்தர்ப்பத்திலும், இதுபோன்ற பிரச்னைகளை எடுத்துக்காட்டி, எனக்கு கடிதம் எழுதி இருந்தீர்கள். அப்போது நாங்கள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து, விரிவாக பதில் அளித்திருந்தேன்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு, அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சாலை இணைப்பின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்துள்ளோம். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க, அனைத்து துறைகளுக்கும் அறிவுரைகள் வழங்கி உள்ளேன்.

அதிகாரிகள் குழுதிட்டங்களை செயல்படுத்துவதில், தற்போதுள்ள பிரச்னைகள், பல ஆண்டுகளாக நிலவி வருபவை. இப்பிரச்னைகள் தொடர்பாக ஆராய்ந்து, அவற்றை தீர்க்க, தலைமைச் செயலரின் கீழ் உள்ள அதிகாரிகள் குழு, உரிய முயற்சிகளை எடுத்து வருகிறது.தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கான உயர்மட்டக் கூட்டம், 15 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர், 2021 அக்., 12ம் தேதி, டில்லியில் உங்களை சந்தித்து, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களை விரைவாக செயல்படுத்த, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கினார்.அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, மாவட்ட கலெக்டர்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பங்கேற்புடன், டிச., 16ம் தேதி கூட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், 80 சதவீத பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் சாலை, அரியலுார் - காரைக்குடி சாலை போன்றவை தொடர்பான பிரச்னைகள், பொதுப்பணித் துறை அமைச்சர், தலைமைச் செயலர் தலையீட்டின் காரணமாக தீர்க்கப்பட்டுள்ளன. நடுவர் முடிவுதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்கள் தொடர்பான மறு ஆய்வின்போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், சில திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின் கீழ், நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிப்பதை முறைப்படுத்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நிலம் கையகப்படுத்த, தகுதி வாய்ந்த ஆணையம் நிர்ணயித்த மதிப்பீட்டையோ அல்லது கலெக்டர்களால் வழங்கப்பட்ட நடுவர் முடிவுகளையோ ஒப்புக் கொள்ளவில்லை. இது, திட்ட செயல் முறையை முடக்கி உள்ளது.

அதேபோல், பல சந்தர்ப்பங்களில் மண் கிராவல் எடுப்பதற்கு, தேவையான அனுமதி விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இல்லாமல் வழங்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் தேங்குவதால் அல்லது சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களில் இருப்பதால், சாத்தியமற்ற இடங்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்தகைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் முன் ஆராய வேண்டும்.

மாநில அரசு எடுத்த முயற்சிகள், அதன் விளைவாக துறையில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் வைத்து, தாங்கள் பேசியது சற்று வியப்பாக இருந்தது. இருப்பினும் அனைத்துப் பணிகளையும் விரைவுப்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, என் அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.


ஒத்துழைப்பு வழங்க முதல்வர் உறுதி; வேகமெடுக்குமா சாலை பணிகள்?


மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் இனி வேகமெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில், 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில், 5,134 கி.மீ., சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரிக்கிறது. மீதமுள்ள 1,472 கி.மீ., சாலைகள், மாநில நெடுஞ்சாலைத் துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவு வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான நிதியை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வழங்குகிறது.

தமிழகத்தில், நடப்பாண்டில், 1,149 கி.மீ., நீளமுள்ள 23 சாலை பணிகளை மேற்கொள்ள, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் 37 ஆயிரத்து 359 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள நிலம் எடுப்பு, மின்சாரம், குடிநீர், தொலைபேசி உள்ளிட்ட பயன்பாடு சேவைகளை மாற்றி அமைக்க, மாநில அரசு உதவ வேண்டும். சாலை பணிகளுக்கு தேவையான மண் மற்றும் கட்டுமான பொருட்கள், தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

தமிழக அரசின் ஒத்துழைப்பு கிடைக்காததால், பல பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது; துவங்கிய பணிகளை முடிக்க முடியாத நிலையும் உள்ளது.


நிலுவையில் கிடக்கும் நெடுஞ்சாலை பணிகள்


 சென்னை, வண்டலுார் - செட்டிபுண்ணியம் இடையில் 275 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலை பணி இழுபறியாக உள்ளது

 மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை, 23.3 கி.மீ., சாலையை ஆறு வழியாக விரிவாக்கம் செய்யும் பணிகளுக்கு, 428 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு கிடப்பில் உள்ளது

 சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் மாதவரம் - நல்லுார் இடையே, 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11கி.மீ.,க்கு உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கும் பணிகளும் தாமதம் விக்கிரவாண்டி - தஞ்சாவூர் இடையிலான சாலைப் பணிகள் இன்னும் முடியவில்லை

 நாகப்பட்டினம் - ராமநாதபுரம் - கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை பணியும் துவக்கப்படாமல் உள்ளது

 மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான சாலைப் பணியும் இன்னும் துவக்கப்படவில்லை

 மதுரை - ராஜபாளையம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை பணிகளும் துவக்கப்படாமல் பல மாதங்களாக இழுபறியாக உள்ளது

 உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி பல மாதங்கள் ஆகியும், சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை பணி துவக்கப்படவில்லை

 திருச்சி - சிதம்பரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள், 2,550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டு, இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது

 திண்டிவனம் - கிருஷ்ணகிரி இடையிலான 130 கி.மீ., சாலை புனரமைப்பு பணிகள், 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்பட்டு, அரைகுறையாக உள்ளது.இவை மட்டுமின்றி, மேலும் பல சாலை பணிகளும் கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளன. மழை பெய்து ஏரிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மண் கிடைக்காமலும் பல பணிகள் முடங்கி கிடக்கின்றன.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X