வேலுார்:ராஜிவ் கொலையாளி நளினிக்கு, 30 நாள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, 50, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு ஜூலை மாதம் 25ல், அவரது மகள் அரித்ராவின் திருமணத்திற்காக நளினிக்கு 51 நாள் பரோல் வழங்கப்பட்டது. அப்போது அவர் சத்துவாச்சாரி வள்ளலாரில் தங்கியிருந்தார். நளினியின் பரோல் காலத்தில் அரித்ராவுக்கு திருமணம் நடக்கவில்லை.
தனக்கு உடல் நிலை சரியில்லை, அதனால் மகளோடு தங்கியிருக்க நளினிக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.அவருக்கு 30 நாள் பரோல் வழங்க தமிழக அரசு கடந்த ஆண்டு டிச., மாதம் 23ல் உத்தரவிட்டது. 27 ம் தேதி பரோலில் நளினி விடுதலை செய்யப்பட்டார். காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள அவரது உறவினர் சத்தியவாணி என்பவர் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், நளினிக்கு மேலும் 30 நாள் பரோல் நீட்டிப்பு செய்யும்படி அவரது தாய் பத்மா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 30 நாள் பரோல் நீடித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான நகலை சிறைத்துறையினர் பிரம்மபுரத்தில் உள்ள அவரிடம் வழங்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE