ஜம்மு :தேச விரோத சக்திகள் குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை அளித்த தகவலை அடுத்து ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுதும் குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜம்மு பிராந்திய எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி., டி.கே.பூரா நேற்று கூறியதாவது:தேச விரோத சக்திகள் குடியரசு தின விழாவை சீர்குலைக்கலாம் என, உளவுத் துறை தெரிவித்து உள்ளது. எல்லையில் ஊடுருவுவது அல்லது ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிகுண்டுகள், போதை மருந்துகள் ஆகியவற்றை அனுப்புவது ஆகியவை நடக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதனால் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தீவிர கண்காணிப்புடன் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அதிகபட்ச வீரர்களும், அதிகாரிகளும் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இரு வாரங்களுக்கு எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லையோரம் ரகசிய சுரங்கங்களை கண்டுபிடிப்பது, ஆளில்லா குட்டி விமானங்களை தகர்க்கும் பயிற்சிகளை மேற்கொள்வது உள்ளிட்டவற்றில் வீரர்கள் ஈடுபடுவர்.
கண்காணிப்பு சாதனங்கள் வாயிலாக சந்தேகத்திற்கு இடமான நபர்களை அடையாளம் காணும் பணியும் நடக்கிறது. எல்லை பாதுகாப்பு படையினருடன், ஜம்மு - காஷ்மீர் போலீசார், ராணுவத்தினர் ஆகியோர் இணைந்து ரோந்து பணியிலும், பயிற்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர். தேச விரோத சக்திகள் எத்தகைய முயற்சியில் ஈடுபட்டாலும் அதை வீரர்கள் முறியடிப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.
காத்திருப்பு
ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த போலீசார் கூறியதாவது:கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது 2021ல் காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் குறைந்துள்ளது. பாக்., உடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே அமைதி நிலவுகிறது.
எனினும், எல்லை நெடுகிலும் பல்வேறு இடங்களில் 104 - 135 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை தடுக்க ராணுவத்தினரும், எல்லை பாதுகாப்பு படையினரும் தயாராக உள்ளனர்.
பலத்த பாதுகாப்பு
வழிகாட்டிகள் சிலரும் இங்கிருந்து எல்லை தாண்டி சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்த பின் கண்காணிப்பில் வைக்கப்படுவர். அவர்களின் குடும்பத்தினரும் கண்காணிக்கப்படுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.குடியரசு தின விழா பாதுகாப்புக்காக தலைநகர் டில்லியில் 27 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ராணுவ வீரர்கள், மத்திய ஆயுதப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டில்லியின் அனைத்து எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டவர்களுக்குமட்டுமே டில்லியில் அனுமதி
டில்லியில் நடைபெறும் விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால் மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து டில்லி போலீஸ் நேற்று வெளியிட்டு உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:இரண்டு 'டோஸ்' தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது.முக கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
வாகன நிறுத்துமிடத்தில் குறைந்த எண்ணிக்கையிலேயே வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதனால் வேறு சிலருடன் சேர்ந்து, ஒரே வாகனத்தில் வருவது சிறந்ததாக இருக்கும்.
அல்லது வாடகை வாகனங்களில் வரலாம். தகுந்த அடையாள அட்டை, தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE