சொதப்பலாய் முடிந்த ஜல்லிக்கட்டு

Updated : ஜன 25, 2022 | Added : ஜன 25, 2022
Advertisement
காலையிலேயே மித்ராவிடம் இருந்து அலைபேசி அழைப்பு!''லேசாக காய்ச்சல் அடிப்பதால், வெளியே வரவில்லை,'' என, தகவல் கூறிவிட்டு, ''அக்கா! நான் நாலஞ்சு நாளைக்கு வெளியே வர்றதா இல்லை. நீங்களும் வெளியே போகாதீங்க. எதுவா இருந்தாலும் போன்லயே தகவல் சொல்லுங்க,'' என்றாள்.''நல்லா ரெஸ்ட் எடு மித்து... எலக்சன் அறிவிப்பு வந்துட்டா, நிறையா ஓட வேண்டியிருக்கும்!'' என்றாள்
 சொதப்பலாய் முடிந்த ஜல்லிக்கட்டு

காலையிலேயே மித்ராவிடம் இருந்து அலைபேசி அழைப்பு!''லேசாக காய்ச்சல் அடிப்பதால், வெளியே வரவில்லை,'' என, தகவல் கூறிவிட்டு, ''அக்கா! நான் நாலஞ்சு நாளைக்கு வெளியே வர்றதா இல்லை. நீங்களும் வெளியே போகாதீங்க. எதுவா இருந்தாலும் போன்லயே தகவல் சொல்லுங்க,'' என்றாள்.

''நல்லா ரெஸ்ட் எடு மித்து... எலக்சன் அறிவிப்பு வந்துட்டா, நிறையா ஓட வேண்டியிருக்கும்!'' என்றாள் சித்ரா.

''ஆமாக்கா... எல்லா கட்சிகளும் ஜரூரா தயாராயிட்டு இருக்காங்க. ஆளும்கட்சியில, வார்டுக்கு வார்டு கரூர்க்காரங்க 'கேம்ப்' போட்டு, வார்டுல எந்தெந்த சமூகத்தைச் சேர்ந்தவுங்க இருக்காங்க; தி.மு.க.,வுக்கு விழுந்த ஓட்டு எத்தனைன்னு கணக்கெடுத்து வச்சிருக்காங்க. ஆனா, இப்பவும் ஆளும்கட்சிக்குச் சாதகமாக சூழ்நிலை இருக்குறது மாதிரித் தெரியலை!'' என்றாள் மித்ரா.

''உண்மைதான் மித்து...பெரும்பான்மையா ஜெயிக்கிறது கஷ்டம்; கொஞ்சம் கஷ்டப்பட்டா, 'பிப்டி பிப்டி' அடிக்கலாம்னு உளவுத்துறையே ரிப்போர்ட் போட்ருக்காம். அதனால, 'திருமங்கலம் பார்முலா'வை கரூர்க்காரர் நம்பியிருக்காராம். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எந்தக் கட்சிக்காரங்களா இருந்தாலும், வீட்டுக்கு 'கவர்' கரெக்டா போகணும்னு திட்டம் போட்ருக்காங்களாம்!'' என்றாள் சித்ரா.

''என்ன பண்ணுனாலும் கதையாகுமான்னு தெரியலை. பொங்கல் தொகுப்புல வீட்டுக்கு வீடு ஆளும்கட்சி பேரு நாறிக்கெடக்குது. பணமாக் கொடுத்திருக்கலாமேன்னு 'லேடீஸ்' பேசுறாங்க. அதனால பணமாக் கொடுத்தா, ஓட்டு வாங்கிடலாம்னு நினைக்கிறாங்க போலிருக்கு!'' என்றாள் மித்ரா.

''பொங்கல் தொகுப்பு ஒரு பக்கம்...இன்னொரு பக்கம் ஆளும்கட்சிக்காரங்களே கரூர்க்காரர் மேல 'செம' கோபத்துல இருக்காங்க. அவுங்க ஆளுங்க, கோவை தி.மு.க.,காரங்களை மதிக்கிறதே இல்லையாம். ரொம்பவே மரியாதை இல்லாமப் பேசுறாங்களாம். நம்ம ஊர்ல இருக்குறவுங்க கரன்சியை அசால்ட்டா செலவு பண்றவுங்க. அவுங்க செலவுக்கு பணத்தை துாக்கி வீசுறாங்களாம்,?'' சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே புகுந்தாள் மித்ரா...

''அக்கா, டாஸ்மாக் பார் ஏலம் எடுக்குற விவகாரத்துல, கரூர்க்காரங்க மொத்தமா அள்ளிட்டதால, நம்மூர் உடன் பிறப்புகள், அ.தி.மு.க.,வினருக்கு நெருக்கமானவங்களுடன் கூட்டணி போட்டு, புதுசா பார் எடுத்தவங்களை நடத்த விடாமத் தடுத்துட்டு இருக்காங்களாம்!'' என, 'ரூட்' மாறினாள்,

''இந்த விஷயத்தை நானும் கேள்விப்பட்டேன் மித்து. சிட்டியிலயும், சிட்டியை ஒட்டுன ஏரியாக்கள்லயும், 'பார்' நடத்திட்டு இருக்கிறவுங்க, பில்டிங் ஓணரோட 'அக்ரிமென்ட்' போட்ருக்கிறதால, பல இடங்கள்ல 'பார்'களை புதுசா உள் குத்தகைக்கு எடுத்தவங்க, நடத்துறதுக்கு இடமில்லாம திண்டாடுறாங்களாம். அதுல, இந்த மாதிரி கூட்டணி உருவானதா பேசிக்கிறாங்க!''

''அப்படி இல்லைக்கா...பகிரங்கமாவே, சிலர் இன்னமும், கோவை 'மாஜி'யோட 'ஸ்லீப்பர் செல்'லா இருக்காங்க. வெள்ளலுார்ல இருக்குற ஒரு டாஸ்மாக் பாரை கரூர்க்காரங்க எடுத்தாங்க. அக்கடையை, இதுக்கு முன்னாடி நடத்துனவர் யாருன்னா, 'மாஜி'யோட முக்கியமான பினாமி ஒருத்தரு...பேக்கரி ஓனர்!''

''ஓ! தெரியுமே... ஹேவேஸ் ரோட்டுல பல இடங்கள்ல மூன்றெழுத்துல பேக்கரி நடத்துறவர்தானே!''

''அவரேதான்! இப்போ 'பார்' எடுத்த கரூர்க்காரங்க, அந்த பேக்கரிக்காரர்ட்ட வேலை பார்த்த ஒருத்தருக்கு கொடுத்திருக்காங்க. மதுக்கரையில ஆளும்கட்சியில் முக்கியப் பொறுப்புல இருக்குற ஒரு நிர்வாகியும், மக்கள் பிரதிநிதியும் சேர்ந்து, அவரை வீட்டுக்கே கூப்பிட்டு, 'கடையை நடத்தக்கூடாது'ன்னு பஞ்சாயத்து பண்ணிருக்காங்க. அப்போ, பேக்கரிக்காரரும் இருந்திருக்காரு!''

''சூப்பர் கூட்டணியா இருக்கே!''

''இந்த விவகாரம் கட்சியில புகைச்சலாகி, இவுங்க ரெண்டு பேரையும் குறிப்பா சொல்றது மாதிரி, மாறிமாறி 'பேஸ்புக்'ல கமெண்ட் போட்ருக்காங்க. இந்த விவகாரம், அறிவாலயம் வரைக்கும் போயிருக்கிறதாம்!''

''இவுங்க கரன்சிக்காக கட்சிக்குள்ளே அடிச்சிக்கிறாங்க. எதிர்க்கட்சியோட கூட்டணியும் போட்டுக்கிறாங்க. கார்ப்பரேஷன் ஆபீசர்கள், 'ரோட்டுல வண்டி நிறுத்த பார்க்கிங்'னு குண்டைப் போட்டாங்க; அப்புறம் அவுங்களே ரத்து பண்ணிட்டாங்க. அதையும் சோஷியல் மீடியாவுல போட்டுக் கிழிக்கிறாங்க. இன்னொரு பக்கம், 'சூயஸ்' விவகாரத்தை, 'காம்ரேட்'டுகள் தோண்டுறாங்க...தேர்தல்ல தேறுனது மாதிரித்தான்!''

''ஆமாக்கா...ஆளும்கட்சிக்காரங்க மீது திருட்டு புகாரெல்லாம் வருது. குறிச்சியைச் சேர்ந்த ஆளும்கட்சிக்கார் ஒருத்தர், டெலிகாம் டிபார்ட்மென்ட் தற்காலிக ஊழியர், முன்னாள் லேடி கவுன்சிலரோட சேர்ந்து, அந்த ஏரியாவுல இருந்த ஏகப்பட்ட டெலிபோன் கம்பங்களை திருடி வித்திருக்காரு. கிலோ 40 ரூபாய்க்குப் போகுதாம். லட்ச ரூபா கவர்மென்ட் சொத்தை களவாடிருக்காங்க!''

''அது சரி...அ.தி.மு.க.,வுலயும் பெருசா சத்தத்தையே காணோமே...எல்லாரும் கொஞ்சம் 'ஆஃப்' ஆயிட்டது மாதிரித் தெரியுதே...!''

''வேட்பாளர் பட்டியல் ரெடி பண்ணீட்டாங்களாம். தேர்தல் தேதியை அறிவிச்சதுமே, லிஸ்ட்டை ரிலீஸ் பண்ணிருவாங்களாம்...ஆனா, ஆளும்கட்சியை எதிர்த்து அரசியல் பண்றதுக்கு பயந்துட்டு பலரும் ஒதுங்குறாங்களாம். அவுங்களை வலுக்கட்டாயமா தேர்தல் களத்துல இறக்கி விட்டா, வேலை செய்யாம தோத்துடுவாங்களோன்னு, 'மாஜி'யும் குழப்பத்துல இருக்காராம்!''

'டிவி'யில் ஒளிபரப்பிய ஜல்லிக்கட்டு காட்சிகளைப் பார்த்த சித்ரா, ''மித்து...ஜல்லிக்கட்டை ஓரளவுக்கு சிறப்பா நடத்தி, முடிச்சிட்டாங்க போலிருக்கே!'' என்றாள்.'

''யாரு சொன்னா...நிறையா சொதப்பல் ஆயிருச்சு...ஏற்பாட்டுலயே ஏகப்பட்ட குளறுபடி. காளையைக் கொண்டு வந்தவங்க கடுப்பாகி போயிருக்காங்க. பல ஆயிரம் செலவு பண்ணி, 'டெம்போ'வுல காளைகளைக் கொண்டு வந்தா, அண்டா, ஹாட் பாக்ஸ்ன்னு பரிசு கொடுத்திருக்காங்க!''

''இன்னொரு கம்பிளைண்ட்டும் கேள்விப்பட்டேன்...ஆளும்கட்சிக்காரங்க காளைகளை மட்டும் முன்னாடியே அனுப்புனாங்களாம். மத்தவுங்க எல்லாம் மணிக்கணக்குல காத்துக்கெடந்து நொந்து போயிட்டாங்களாமே...சசிகலா பேர்ல கூட காளை இறங்குச்சாமே!''

''அதெல்லாம் விட முக்கியமான விஷயம். அந்த ஜல்லிக்கட்டுல அமைச்சருக்குக் கொடுத்த பட்டம்தான். ஜல்லிக்கட்டை வர்ணனை பண்ணிட்டு இருந்தவரு, திடீர்னு 'கொங்கு மண்டல தளபதி'ன்னு பட்டம் கொடுத்துப் பேசவும் கட்சிக்காரங்களே கொஞ்சம் ஆடிப் போயிட்டாங்க. ஆனா, அப்பா-மகன் இருவருக்கும் நெருக்கமா இருக்குறதால, வாயைத் திறந்து யாரும் பேச மாட்டேங்கிறாங்க!''

''அப்பான்னு சொன்னதும் ஞாபகம் வந்துச்சு...மறுபடியும் நம்ம ஊருக்கு சி.எம்., வர்றாராமே!''

''ஆமாக்கா...டில்லி குடியரசு தினவிழாவுல மறுக்கப்பட்ட அலங்கார ஊர்தி, சென்னை குடியரசு தினவிழாவுல பங்கேற்குறதா சொன்னாங்களே...அந்த ஊர்தி, 27 அல்லது, 28ல நம்ம ஊருக்கு வருதாம். அதைத் துவக்கி வைக்க, நேர்ல வர்றாராம். அதாவது, சென்னைக்கு அடுத்து நாங்க கோவைக்கு முக்கியத்துவம் கொடுக்குறோம்னு சொல்லாம சொல்றாங்களாமாம்!''

''அப்படீன்னா உள்ளாட்சித் தேர்தலுக்கு ஏகப்பட்ட வாக்குறுதிகள் கொடுப்பாங்கன்னு சொல்லு!''

''இருக்கலாம்...ஆனா, கவர்மென்ட் ஆபீசுல தொட்டதுக்கெல்லாம் துட்டு வாங்குனா, சாதாரண மக்கள்ட்ட எப்படி ஓட்டு வாங்க முடியும். கார்ப்பரேஷன் சென்ட்ரல் ஆபீஸ் வளாகத்துல இருக்குற இ-சேவை மையத்துல வேலைபார்த்த லேடிக்கு கொரோனா தொற்று வந்து லீவுல போயிட்டாங்களாம். நல்லா வேலை பார்ப்பார்னு சின்ன வயசுப் பையனைப் போட்டா, அவரு ஒரு சர்ட்டிபிகேட்டுக்கு 100, 200ன்னு கரன்சி கேட்குறாராம்!''

''போலீஸ் பத்தி தகவல் எதுவும் இல்லையா மித்து...!'' என்று சித்ரா கேட்க, ''அக்கா! புலியகுளம் ஏரியாவுல சேவல் சண்டை ஜெகஜோதியா நடக்குதாம். அந்த ஸ்டேஷன்காரங்களுக்கு மாமூல் கொட்டுதாம். அதை நடத்துற பசங்க, ஏரியாவுல பெரிய தாதாவா உருவெடுத்துட்டு இருக்காங்களாம்!'' என்று போலீஸ் தகவலைப் பரிமாறினாள் மித்ரா.

அதற்குள் வாசலில் அழைப்பு மணி கேட்கவே, 'நான் அப்புறம் பேசுறேன் மித்து!' என்ற சித்ரா, அலைபேசி அழைப்பைத் துண்டித்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X